இந்திய கார்களின் தரத்தை உலக நாடுகளுக்கு எடுத்து செல்லும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன்!! முதல் ஏற்றுமதி துவங்கியது!
இந்தியா 2.0 பயணத்தில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் புதியதொரு மைல்கல்லை கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோவும், ஃபோக்ஸ்வேகனும் கூட்டணியில் இருப்பது ஊரறிந்த விஷயம். இன்னும் சரியாக சொல்ல போனால், ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் ஒரு அங்கமாகவே ஸ்கோடா உள்ளது. இந்த இரு பிராண்ட்களில் இருந்தும் கடந்த பல ஆண்டுகளாக கார்கள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இந்திய சந்தையில் இவை இரண்டும் தங்களுக்கான வலுவான இடத்தை பிடிக்க தற்போதுவரையில் போராடி கொண்டுதான் இருக்கின்றன. இதற்காக இந்த கூட்டணி நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுள் முக்கியமானது இந்தியா 2.0 திட்டமாகும். இந்த திட்டத்தின்படி எம்க்யூபி-ஏ0-இன் (இந்தியா) என்கிற ப்ளாட்ஃபாரம் உருவாக்கப்பட்டு, இனி விற்பனைக்கு கொண்டுவரப்படும் கார்கள் இந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த வகையில் இந்திய சந்தைக்கும், இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கும் ஏற்ப கட்டமைக்கப்பட்ட எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முதல் காராக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் கடந்த 2021 ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இதே ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வந்தது.

ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் பயணிகள் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களில் இந்தியாவில் கவனிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதற்கு குஷாக் மற்றும் டைகுன் மாடல்களை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். இவ்வாறு நம் நாட்டு சந்தையில் ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி வைத்திருப்பதினால்தான் முன்கூட்டியே இந்த திட்டத்திற்கு இந்தியா 2.0 என பெயர் சூட்டப்பட்டுள்ளது போல.

சரி இந்த செய்தியில் கூறவந்த விஷயத்திற்கு வருவோம். இந்த இந்தியா 2.0 பயணத்தில் முக்கியமான மைல்கல்களுள் ஒன்றாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல்முறையாக எம்க்யூபி-ஏ0-இன் இயக்குத்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ் கார்களை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வைத்துள்ளது.

அதாவது, இந்த கூட்டணி நிறுவனங்களில் இருந்து இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்கள் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,232 ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ் கார்கள் மும்பை துரைமுகத்தில் இருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு கப்பலில் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இது ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இதுகுறித்து இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியன் கான் வான் சீலன் கருத்து தெரிவிக்கையில், "ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ் கார்கள் ஏற்றுமதியானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை மற்ற உலக நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கூட்டணி நிறுவனங்களின் முயற்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் உலகளாவிய ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை உருவாக்குவது என்பது எங்களது இந்தியாவிற்கான கொள்கைகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் உள்ள எங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்கள், உலகளவில் நாங்கள் கடைப்பிடிக்கும் அதே தரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரமில் உலக நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ் தொழிற்நுட்பம் மற்றும் தரம் முதல் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் வரையில் கார்கள் உற்பத்தியின் அனைத்து அம்சங்களிலும் நாங்கள் பின்பற்றும் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

உள்நாட்டு சந்தையில் எங்களின் வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமின்றி, உலகளாவிய ஏற்றுமதி தடம் விரிவடைய செய்வதிலும் நெகிழ்வு பண்பை கொண்ட எம்க்யூபி-ஏ0-இன் இயக்குதளம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஏற்றுமதி மைல்கல் மூலம், அடுத்த தலைமுறை வாகனங்களை இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்தும் வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறோம்" என்றார்.

இந்தியாவில் கார்கள் ஏற்றுமதியை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2011இல் துவங்கியது. முதற்கட்டமாக 6,256 ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார்கள் தென்னாப்பிரிக்க நாட்டு சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்திய துணைக்கண்ட நாடுகள், மேற்காசிய வளைகுடா நாடுகள் மற்றும் கரீபியன் தீவுகள் உள்பட மொத்தம் 61 நாடுகளுக்கு இந்த கூட்டணி நிறுவனங்களின் இந்திய தயாரிப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








