பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் நாளை அறிமுகம்... மாருதி, ஹோண்டாவிற்கு செக்!
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) கார் நாளை (மார்ச் 8) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் வெகு சமீபத்தில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இந்த காரின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மாடலும், அதை தொடர்ந்து 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதற்கு அடுத்தபடியாக இந்த செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ள காராக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இருக்கிறது. நடப்பாண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கவுள்ள மிக முக்கியமான தயாரிப்பாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் திகழ்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இதற்கு அடுத்தபடியாக இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முக்கியான தயாரிப்பு எதுவென்றால், அது விர்டுஸ்தான். ஃபோக்ஸ்வேகன் வெண்ட்டோ காருக்கு பதிலாக, விர்டுஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த புதிய செடான் கார் குறித்து நமக்கு ஏற்கனவே ஒரு சில தகவல்கள் தெரியவந்துள்ளன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா காரும் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளன. இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்ஜின் தேர்வுகள்தான், அப்படியே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இந்த 2 கார்களிலும் ஒரு சில வசதிகளும் ஒன்று போலவே இருக்கும். இதன்படி MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஃபோக்ஸ்வேன் விர்டுஸ் கார் கட்டமைப்படுகிறது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம், 4,541 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் அகலம் மற்றும் உயரம் முறையே 1,752 மிமீ ஆகவும், 1,487 மிமீ ஆகவும் இருக்கிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம் 2,651 மிமீ ஆக உள்ளது. விரைவில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் இதே அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்வின் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகிய அம்சங்களை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் பெற்றிருக்கும். செயல்திறனை பொறுத்தவரையில், ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இன்ஜின் தேர்வுகள்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் கொடுக்கப்படவுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா காரை போல், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் வசதிகளுக்கு பஞ்சமிருக்காது. இதன்படி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாதுகாப்பை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்சி உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் போட்டியிடும்.

அத்துடன் ஸ்கோடா ஸ்லாவியா காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும். மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் நேருக்கு நேராக போட்டியிட்டு வருவதை போல், மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களுக்கும் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ளும்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் நாளை பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எனவே இந்த கார் பற்றிய ஒரு சில தகவல்கள் மட்டுமே நாளை வெளியாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








