கண்ட நேரத்துல போகதீங்க.. கார் வாங்க செல்ல சரியான நேரம் எது? டிஸ்கவுண்டுகளை இந்த மாசத்துலதான் வாரி வழங்குவாங்க!
காரை வாங்க டீலர்ஷிப் செல்ல சரியான நேரம் எது? டெஸ்ட் டிரைவ் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எது? மற்றும் டீலர்களிடம் சிறந்த சலுகையை எப்போது பெற முடியும்?, இதுமாதிரியான அனைத்து கேள்விகளுக்குமான பதிலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

எனக்கு ஒரு டூ-வீலர், என் மனைவிக்கு ஒரு ஸ்கூட்டர்னு வீட்ல ஆளுக்கு ஒரு இருசக்கர வாகனம் இருக்கு. இருந்தாலும் ஃபேமிலியோட வெளியாக ஓர் வாங்கலாம்னு இருக்கோம். ஆனா, புதிய காரை எப்போ வாங்கினா நல்ல சலுகை கிடைக்கும்னு மட்டும் தெரிய மாட்டிக்குது. இதுக்கு ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்கனு பலர் கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் எந்த நேரம் காரை வாங்க உகந்த நேரம், எப்போது டீலரை சந்திக்க செல்லலாம் மற்றும் டெஸ்ட் டிரைவ், சலுகைகள் போன்றவற்றை எப்போது நாடலாம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

டீலரை சந்திக்க செல்ல சிறந்த நேரம் எது?
கார் விற்பனையகத்திற்கு போற பிளானை போட்டுட்டீங்கனா காலையே செல்வதை தவிர்த்துடுங்க. ஏன்னா?, அப்போதான் ஊழியர்கள் வர தொடங்கியிருப்பாங்க. பெரும்பாலான வாகன விற்பனையகங்கள் காலை 10 மணிக்கு பின்னரே திறக்கப்படுகின்றன. வந்த உடன் சிலர் ஷோரூம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவர்.

மேலும் அந்த நேரத்தில் ஊழியர்களும் சற்று குறைவாகவே இருப்பர். இந்த மாதிரியான சூழலில் ஷோரூம் சென்றால் சில மணி நேரங்கள் அங்கு காத்திருக்க நேரிடும். ஏன், ஊழியர்களின் பதிலை பெறுவதற்கே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சூழல் நம்மை எரிச்சலடைய செய்யலாம்.

இதனால்தான் ஷோரூம் திறந்து ஒரு சில மணி நேரங்கள் கழித்து அங்கு செல்வது சிறந்தது என நாங்கள் கூறுகின்றோம். அப்போதே உங்களை முறையாக வரவேற்கும் நிலையில் ஊழியர்களும் இருப்பர். தொடர்ந்து, டெஸ்ட் டிரைவையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல் வார இறுதி நாட்களில் ஷோரூம் செல்வதை சுத்தமாக தவிர்த்துவிடுங்கள். பலர் வார இறுதி நாட்களையே ஷோரூம் செல்ல தேர்வு செய்கின்றனர். ஆகையால், சில நேரங்களில் வார இறுதி நாட்களில் ஷோரூம் செம்ம பிஸியாகிவிடுகின்றன. இதனைத் தவிர்க்க வாரத்தின் தொடக்க நாட்களில் ஷோரூமை விசிட் செய்யவும்.

அதிக கூட்டத்தின் காரணமாக உங்களால் போதிய நேரம் புதிய காருடன் செலவிட முடியாமல் போகலாம். ஆகையால், திங்கள் அல்லது பிற வேலை நாட்களை ஷோரூம் செல்ல தேர்வு செய்யுங்கள். இந்த நாட்களில் மட்டுமே சிறந்த ரெஸ்பான்ஸை விற்பனையக பணியாளர்களிடத்தில் நம்மால் பெற முடியும்.

டெஸ்ட் டிரைவ் கேட்க மற்றும் டெஸ்ட் டிரைவ் செய்ய சிறந்த நேரம் எது?
காரை டெஸ்ட் டிரைவ் செய்ய கார் விற்பனையகத்திற்குதான் போகணும்னு இல்ல. நம்முடைய வீடு அல்லது அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் டிரைவ் செய்துகொள்ளலாம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இதற்கான கோரிக்கையை முன் வைத்துவிட்டாலே போதும். நமக்கு உகந்த நேரத்தில் ஷோரூம் பணியாளர்களை காரை கொண்டு வந்து டெஸ்ட் டிரைவ் மேற்கொள்ள வைப்பர்.

அதேநேரத்தில், மதிய உணவு இடைவேளைக்கு நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யலாம். இந்த நேரத்தில் பொதுவாக பல சாலைகள் சற்று காலியாகவே இருக்கும். அதாவது, வாகன கூட்ட நெரிசலின்றி காணப்படும். இந்த மாதிரியான நேரங்களில் டெஸ்ட் டிரைவை எந்த தடையும் இன்றி செய்ய முடியும்.

தயவு செய்து காலை அல்லது மாலை நேரங்களில் டெஸ்ட் டிரைவ் எடுக்காதீர்கள். இந்த நேரத்தில் மிக அதிகளவில் வாகன நெரிசல் காணப்படும். இது தேவையற்ற சிக்கலை சந்திக்க வைத்துவிடும். மேலும், டெஸ்ட் டிரைவை பொருத்தவரை வேலை நாட்களில் எடுப்பதைக் காட்டிலும் வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் மேற்கொள்வதே நல்லது. ஏனெனில் அன்றைய தினங்களில்தான் சாலை வெரிச்சோடி காணப்படும்.

டிஸ்கவுண்டை கேட்க எது சரியான நேரம்?
புதிய காரை வாங்க செல்வோர் பலரின் எதிர்பார்ப்பு இதுவாகும். எதாவது ஒரு வகையில் குறைந்தபட்சமாவது தள்ளுபடியை காரின் விலையில் செய்வார்களா என்ற கேள்வி யாருக்கும் இல்லாமல் இல்லை. ஆனால், உற்பத்தியாளர்கள் மாதங்களைப் பொருத்தே தள்ளுபடிகளை வாரி வழங்குகின்றனர்.

அதேநேரத்தில் மாத இறுதியிலும் கார் விற்பனையாளர்கள் சிலர் சூப்பரான வகையில் சலுகைகளை வழங்குகின்றனர். நீங்கள் நன்றாக பேரம் பேசுபவராக இருந்தால் மிக பெஸ்டான ஆஃபர்களைப் பெறுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். அதேநேரத்தில் மாதங்களைப் பொருத்தவரை மார்ச் மாதம் வாகன உற்பத்தியாளர்களுக்கு மிக சிறந்த மாதமாக இருக்கின்றது.

இந்த மாதத்திலேயே தொழிலதிபர்கள் பலர் கார்களை வாங்குகின்றனர். வருமான வரி போன்றவற்றைக் காரணமாகக் கொண்டு இந்த மாதத்தில் தொழிலதிபர்கள் புதிய வாகனங்களை வாங்குவதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், இந்த மாதிரியான நேரங்களில் அதிகளவில் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகின்றது. அதேநேரத்தில், ஒரு விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இந்த மாதிரியான நேரங்களிலும் சலுகைகளை அள்ளி வீசுவர்.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வாகன விற்பனை சற்றே குறைந்து காணப்படும். ஆகையால், இந்த மாதங்களில் டீலர்களே சில சூப்பரான சலுகைகளை இந்த மாதங்களில் வழங்குவதுண்டு. இதேபோல் தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களை முன்னிட்டும் வாகன நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கும் என்பது கவனித்தகுந்தது.

இதேபோல், ஆண்டு முடிவை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்த ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். அந்த மாதிரியான நேரங்களில் தங்களின் பழைய வெர்ஷன்களை அதிக சலுகைகளுடன் வெளியேற்ற நினைக்கும். எனவே, டிசம்பர் மாதத்திலும் புதிய வாகனங்களுக்கு சிறந்த சலுகைகளை எதிர்பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications