கார் விபத்தாயிடுச்சு... அடுத்து என்ன செய்ய வேண்டும்? இவ்ளோ விஷயம் இருக்கா!!
சாலை விபத்துகள் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமாக எப்போதோ மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், உலக நாடுகள் மத்தியில் சாலை விபத்துகளில் நமது இந்தியா முன்னிலை வகிப்பது ஓர் கசப்பான உண்மை ஆகும்.

சாலை விபத்துகளில் பயணிகள் கார்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதற்கு நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் தரத்தையும், அதனை காட்டிலும் சாலைகளின் தரத்தையும் முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். ஆதலால் ஒருவேளை நீங்கள் சாலை விபத்துகளில் சிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வாகனத்தை நிறுத்துதல்
நீங்கள் எந்த வாகனத்தில் பயணித்தாலும் சரி, விபத்திற்கு நீங்கள் தான் காரணம் என்றால் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயலக்கூடாது. அது சிறிய விபத்தாக இருந்தாலும் சரி. ஏனெனில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை சட்டப்பூர்வமாக சரிச்செய்ய முயல வேண்டும்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றால், உங்களுக்கான தண்டனை நீண்டுக்கொண்டே போகும். வாகனத்தை நிறுத்திய பிறகு தங்களை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அந்த நேர படப்படப்பில் என்ன செய்கின்றோம் என்பது நமக்கே தெரியாது. இதனால் தேவை இல்லாத வாக்குவாதங்களும், கைக்கலப்பும் ஏற்பட்டு பிரச்சனை பெரியதாகக்கூடும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்க
வாகனத்தை சம்பவ இடத்திலேயே நிறுத்திய பின்பு எந்தவொரு ஓட்டுனருக்கும் தலையாய கடமை என்னவென்றால், தனது நிலையை உணர்ந்த பிறகு, தன்னை நம்பிவந்த பயணிகளின் நிலைமை எவ்வாறு உள்ளது? அனைவரும் நலமா என்பதை பரிசோதிப்பது ஆகும். அதன்பின் விபத்தில் காயமடைந்தோரில் யாருக்கு முதலாவதாக உதவியை வழங்க வேண்டும் என்பதை சில வினாடிகளிலேயே அடையாளம் காணுதல் அவசியமாகும்.

தனது வாகனத்தில் அனைவரும் நலம் என்றானபின், தன்னால் விபத்திற்குள்ளான வாகனத்தில் பயணித்தவர்களின் நிலைமையை அறிய ஓட்டுனர் முற்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, ஆம்புலன்ஸை அழைப்பது என அனைத்தும் ஓட்டுனர்களின் கடமை ஆகும். வேறு யாராவது பார்த்து கொள்வார்கள் என அங்கிருந்து நழுவி செல்வது நிச்சயமாக கூடாது.

மருத்துவ உதவியை பெறுதல்
தற்சமயம் எந்தவொரு வாகனத்திலும் முதலுதவி தொகுப்பு இருப்பது கட்டாயமாகிவிட்டது. ஆதலால் விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு நீங்களே முதலுதவி தொகுப்பின் மூலம் மருத்துவ உதவியை வழங்கலாம். இதுவும் அப்போதைக்கே, சிறிய காயமாக இருப்பினும் முதலுதவி அளித்தபின் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் அவசியம்.

ஏனெனில் இன்று சிறிய காயமாக இருந்தது, நாளடைவில் பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. விபத்தில் பெரியதாக காயமடைந்தவர்களுக்கும், சுய நினைவை இழந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸை சம்பவ இடத்திற்கு அழைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் முன்பாக, ஏற்கனவே கூறியதுபோல், ஓட்டுனர் தனது உடல்நிலையை அறிந்து கொள்ளல் அவசியம்.

காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க
தன்னையும், தனது பயணிகளின் உடல்நிலையையும் சரிப்பார்த்த பிறகு, தனது வாகனம் அடைந்துள்ள சேதத்தை மதிப்பிட்டு அதனை தனது காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னால் விபத்து நடைபெற்றதா அல்லது மற்ற வாகனத்தால் தனது வாகனம் சேதத்திற்கு உள்ளானதா என்பதையும் ஓட்டுனர் தெளிவாக காப்பீட்டு நிறுவனத்திற்கு எடுத்து கூறல் வேண்டும்.

படங்களை எடுத்தல்
இதுவும் காப்பீட்டு நிறுவனத்திற்கே ஆகும். சம்பவ இடத்தில் இருந்து தனது வாகனத்தை படம் எடுத்து கொள்ளுதல் காப்பீட்டு தொகையை பெற ஆதாரமாக இருக்கும். இதனால் காப்பீட்டு தொகையை பெறுவதில் சிக்கல் இருக்காது. முடிந்தவரை ஒரே இடத்தில் இருந்து படங்களை எடுக்காமல், வாகனத்தை சுற்றிலும் படங்களை எடுத்து வைத்து கொள்ளுதல் நல்லது. மேலும் விபத்திற்குள்ளான மற்ற வாகனங்களையும் படம் பிடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை தேவைப்பட்டால் போலீஸாரிடம் காண்பிக்க உபயோகப்படும்.

காரை பழுதுப்பார்த்தல்
முறையாக நீங்கள் உங்களது காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளீர்கள் எனில், அங்கிருந்து வாகனத்தின் சேதத்தை அளவிட ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார். அவர் சில ஆய்வுகளுக்கு பின்பு பழுது பார்ப்பிற்காக குறிப்பிட்ட தொகையை வழங்குவார். மேலும், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கேரேஜையும் பரிசீலிப்பர். அத்துடன் சில காப்பீட்டு நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்ட மெக்கானிக் கேரேஜிற்கு உங்களது வாகனத்தை இழுத்து செல்லவும் உதவக்கூடும். ஆதலால் இயன்றவரை விபத்து ஏற்பட்ட உடனேயே காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








