காரின் என்ஜின் ஆயிலை மாற்றுவதில் அலட்சியம் வேண்டாம்!! கார் வாரண்டி கூட கேன்சல் ஆக வாய்ப்பிருக்கு...!
கார் ஒன்றின் இயக்கத்திற்கு பெட்ரோலோ அல்லது டீசலோ எந்த அளவிற்கு தேவையோ, அந்த அளவிற்கு என்ஜின் ஆயிலும் அவசியமாகும். ஏனெனில் காரின் என்ஜின் செயல்பாடுகள் ஸ்மூத்தாகவும், எந்தவொரு இடையூறும் இன்றி இருப்பதற்கு என்ஜின் ஆயில் தேவைப்படுகிறது.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் என்ஜின் ஆயிலை மாற்றுவதும் அவசியமாகும். நீங்கள் புதியதாக ஒரு காரை வாங்குகிறீர்கள் எனில், அதில் வழங்கப்பட்ட ஆயிலை முதல்முறையாக எப்போது மாற்ற வேண்டும் என்பதை காரை தயாரித்த நிறுவனம் அறிவுறுத்திவிடும். இருப்பினும் அந்த காலத்திற்கு உள்ளாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், புதியதாக வாங்கப்பட்ட காரின் என்ஜின் ஆயிலை எப்போது மாற்றுவது என்பது தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படும் உரிமையாளரின் சேவை புத்தக குறிப்பேடு தெளிவாக தெரிவித்துவிடும். பெரும்பாலும் அதில் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு உள்ளாக என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது.

பொதுவாக, புதிய காரின் என்ஜின் ஆயிலை 16,000கிமீ-கள் அல்லது 12 மாதங்களுக்கு பிறகு மாற்றி வேண்டியிருக்கும். அதாவது இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அந்த சமயத்தில் என்ஜின் ஆயிலை புதியதாக மாற்ற வேண்டும். அதற்காக காரில் பயணம் செய்யும் தூரத்தையும், பயன்படுத்தும் காலத்தையும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஏனெனில் தற்கால மாடர்ன் கார்கள் ஆயில் மாற்றுவதற்கான எச்சரிக்கைகளை டேஸ்போர்டில் இருக்கும் திரைகள் வாயிலாக தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. உரிமையாளரின் சேவை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட வரம்பிற்கு பிறகே இந்த எச்சரிக்கைகள் திரைகளில் காட்டப்படும். ஆதலால் அத்தகைய எச்சரிக்கைகள் வர துவங்கிய உடன் உடனடியாக என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்வது சிறந்தது.

கட்டாயமாக, ஆயில் மாற்றுவதற்கான எச்சரிக்கைகளை புறக்கணித்து, தொடர்ந்து பழைய ஆயிலில் காரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் காரின் என்ஜினை ஒவ்வொரு அங்குலமாக பார்த்து பார்த்து வடிவமைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும் என்பது தெளிவாக தெரியும். பல்லாயிரக்கணக்கான தொலைவிற்கு என்ஜினை சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே அதற்கான ஆயிலை மாற்றுவதற்கான காலக்கெடுவையும், வரம்புகளையும் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயிக்கிறது.

அதுமட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்த காலத்திற்கு அல்லது பயண தூரத்திற்கு பிறகு என்ஜின் ஆயிலை மாற்றவில்லை எனில், அது தயாரித்த நிறுவனம் வழங்கும் உங்களது காருக்கான உத்தரவாதத்தையும் பாதிக்கும். ஆதலால் சிறிய ஆயில் மாற்றத்தை அலட்சியப்படுத்தி, மிக பெரும் தொகையில் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தை (warranty) இழக்காதீர்கள்.

அதுமட்டுமில்லாமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு என்ஜின் ஆயிலை மாற்றுவது தான் உங்களது காரின் செயல்பாட்டிற்கும் நல்லது. என்ஜின் ஆயிலை மாற்றும்போது, கூடவே ஆயிலை அசுத்தமில்லாமல் வடிக்கட்டும் வடிக்கட்டியையும் (Filter) மாற்றிவிடுவது நல்லது. இவற்றை காரை வாங்கிய டீலர்ஷிப் மூலமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எல்லா டீலர்ஷிப் மையங்களும் எல்லா நேரங்களிலும் துரிதமாக இவ்வாறான சேவைகளை வழங்குவதில்லை.

ஆதலால், காரின் உத்தரவாதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, அங்கீகரிக்கப்பட்ட & உரிமம் பெற்ற மெக்கானிக்குகள் மூலமாகவே காருக்கான என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாம். முறையாக பயிற்சிகளையும், அதற்கான தகுதிகளையும் அடைந்த பின்னரே எந்தவொரு மெக்கானிக்கிற்கும் குறிப்பிட்ட பிராண்ட் காரை பழுது பார்ப்பதற்கு உரிமம் வழங்கப்படும்.

டீலர்ஷிப் வாயிலாக செல்வதை காட்டிலும், இவ்வாறான மெக்கானிக்குகளிடம் சென்று என்ஜின் ஆயில் & வடிக்கட்டுவானை மாற்றி கொள்வது செலவு குறைந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், காரை மெக்கானிக்கிடம் விடுவதற்கு முன்னர், சேவைக்கான உத்தரவாதம் வழங்கப்படுமா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சரி... தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த காலக்கெடுவிற்கு முன்பாகவே என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாமா? என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

இதற்கு தேவையே இல்லை. ஒருவேளை, கார் வாங்கும்போது தெரிவிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாகவே ஆயிலை மாற்றி வேண்டிய எச்சரிக்கை டேஸ்போர்டு திரைகளில் காட்டப்பட்டால், நீங்கள் ஆயிலை மாற்றி தான் ஆக வேண்டும். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானது. காரை தயாரிக்கும்போது தயாரிப்பு நிறுவனமே ஏதேனும் தவறை கவனிக்காமல் (இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு, இருந்தாலும் கடந்த காலங்களில் நடந்துள்ளது) இருந்தால் மட்டுமே இவ்வாறு நிகழும்.

ஆதலால் தெரிவிக்கப்பட்ட காலத்திற்கு உள்ளாக ஆயிலை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதுகுறித்து அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்திடமோ அல்லது நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆலோசித்த பின்னர் ஆயிலை மாற்ற பாருங்கள். ஏனெனில் இது தயாரிப்பு நிறுவனத்தின் (அ) டீலர்ஷிப் மையத்தின் தவறு எனில், முன்கூட்டியே ஆயிலை மாற்றுவது கூட காரின் உத்தரவாத வரம்பிற்குள் வரலாம்.


Click it and Unblock the Notifications








