காரில் ஹெட்லைட்களுக்கு கீழிருக்கும் விளக்குகளை பார்த்து யூஸ் பண்ணுங்க!! ஆக்ஸிடெண்ட் நடக்கவும் வாய்ப்பிருக்காம்
இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவது எப்போதுமே சற்று சிரமமான காரியமே. நம்மால் பயணம் செய்யும் சாலையை பார்க்க முடியுமே தவிர்த்து, சாலைக்கு இரு பக்கங்களிலும் இருக்கும் பகுதிகளை அவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது என்பது இதற்கு முக்கிய காரணமாகும். சாலையை தெளிவாக காண லோ-பீம், ஹை-பீம் மற்றும் ஃபாக் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை மூன்றும் தற்கால மாடர்ன் கார்களில் ஒரே ஹெட்லைட் அமைப்பிற்கு உள்ளாகவோ (அ) தனித்தனியாகவோ பொருத்தப்படுகின்றன. ஆனால் இந்த மூன்றையும் எப்போது பயன்படுத்துவது? எந்த சமயங்களில் இவற்றில் ஒன்றை பயன்படுத்தினால் போதும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அவற்றை விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

லோ-பீம் ஹெட்லைட்களை எப்போது பயன்படுத்துவது
லோ-பீம் ஹெட்லைட்களை டேஸ்போர்டில் இருக்கும் டயல்கள் மூலமாக ஒளிர வைக்க முடியும். இத்தகைய விளக்குகளை இரவுநேரங்களில் நகரத்திற்கு உள்ளாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், பார்க்கிங் பகுதிகளில் காரை ஓட்டி செல்லும் போது பயன்படுத்தலாம். அதாவது அத்தகைய நேரங்களில் ஹை-பீம் ஹெட்லைட் அவசியமானது இல்லை, லோ-பீம் ஹெட்லைட்டே போதுமானது.

அதேபோல் மேற்கூறப்பட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்த மழை நாட்களில் காரை இயக்கி செல்லும்போது பகல் நேரங்களிலும் லோ-பீம் ஹெட்லைட்களை பயன்படுத்தலாம். பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ சுரங்கங்கள் உள் பயணிக்கும்போது லோ-பீம் ஹெட்லைட்களை பயன்படுத்துவது மட்டுமே போதுமானது.

லோ-பீம் ஹெட்லைட்களை பயன்படுத்துவதற்கான அறிவுரைகள்
கார்களின் லோ-பீம் ஹெட்லைட்களின் ஒளியானது அதிகப்பட்சமாக ஏறக்குறைய 300 அடி தூரம் வரையில் செல்லும். பழைய கார்களில் மற்றும் தூசி மிகுந்த ஹெட்லைட்களை கொண்ட கார்களில் லோ-பீம் ஹெட்லைட்களின் ஒளி பிரகாசம் சற்று குறையலாம். ஆனால் பொதுவாக, லோ-பீம் ஹெட்லைட்கள் கீழ்நோக்கியவாறு ஒளி வீசுவதால், இருள் மிகவும் அடர்த்தியாக இருக்கும் சமயத்தில் எதிர்வரும் வாகனங்களை அருகாமையில் வந்த பிறகே தெளிவாக காண முடியும்.

ஹை-பீம் ஹெட்லைட்களை எப்போது பயன்படுத்துவது
ஹை-பீம் ஹெட்லைட்களை ஆக்டிவேட் செய்த பின்னர் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் அதுகுறித்த இண்டிகேஷன் ஓட்டுனருக்கு தெரிவிக்கும் விதமாக காட்டப்படும். ஹை-பீம் ஹெட்லைட்களை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால், லோ-பீம் ஹெட்லைட்கள் அதற்கு முன்பாக ஆன் செய்யப்பட வேண்டும். அல்லது ஸ்டீயரிங் சக்கரத்தில் இருக்கும் கண்ட்ரோலை உபயோகித்து ஹை-பீம் ஹெட்லைட்களை மட்டும் ஆன் செய்யலாம், ஆனால் சில வினாடிகளுக்கு மட்டுமே ஒளிரும்.

ஹை-பீம்களை காலியான சாலைகளில் பயணிக்கும்போதும், நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போதும் உபயோகப்படுத்துவதே நல்லது. காடு போன்ற அடர் புதர்கள் நிறைந்த பகுதிக்குள் பயணம் செய்ய ஹை-பீம் ஹெட்லைட்களை பயன்படுத்தலாம். மழை & பனி காலங்களில் நகர்புற சாலைகளில் பயணிக்கும்போதும் ஹை-பீம் ஹெட்லைட்களை உபயோகிப்பதில் தவறில்லை.

ஹை-பீம் ஹெட்லைட்களை பயன்படுத்துவதற்கான அறிவுரைகள்
ஹை-பீம் ஹெட்லைட்களின் ஒளி குறைந்தப்பட்சம் 500 அடி தொலைவு வரையில் செல்லக்கூடியது. ஏனெனில் காரின் ஹெட்லைட் பகுதியில் இருந்து நேராக ஒளி செல்கிறது. ஆதலால் எதிர்வரும் வாகனங்களின் ஓட்டுனர்களின் கண் கூசுவதை தவிர்க்க, ஹை-பீம் ஹெட்லைட்களை இரவு நேரத்தின்போதும் நகர்புற பயணத்தில் பயன்படுத்துவதை தவிருங்கள்.

ஃபாக் விளக்குகளை எப்போது பயன்படுத்துவது
ஃபாக் விளக்குகள் பெரும்பாலும் காரில் ஹெட்லைட் விளக்குக்கு கீழே வழங்கப்படுகின்றன. இது முன்னோக்கி செல்வதற்கு தேவையான ஒளியை அகலப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஃபாக் விளக்குகளை அவற்றின் பெயருக்கு ஏற்ப மழை & பனி அதிகம் பொழியும் சமயங்களில் பயன்படுத்துவது நல்லது.

ஏனெனில் ஃபாக் விளக்குகள் ஹை-பீம் ஹெட்லைட்களை காட்டிலும் அதிகமாக எதிர்வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச வைப்பவை. ஆதலால் மிகவும் அதிக பனி பொழிவின் போது, மற்றும் கனமழையில் பயணம் செய்யும்போது மட்டும் ஃபாக் விளக்குகளை பயன்படுத்தினால் போதுமானது. (நம் இந்தியாவில் பொறுத்தவரையில் மிகவும் அரிதாகவே பயன்படுத்த வேண்டியிருக்கும்)

ஃபாக் விளக்குகளை பயன்படுத்துவதற்கான அறிவுரைகள்
ஏற்கனவே கூறியதுதான், ஃபாக் விளக்குகளை மிகவும் அரிதான சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கும். அதாவது, சாலை எங்குள்ளது என தெரியாத அளவிற்கு பனி படர்ந்திருந்தால் மட்டுமே ஃபாக் விளக்குகளை பயன்படுத்துங்கள். அவ்வாறான பனி பொழிவை நமது தமிழகத்தில் மிகவும் சில பகுதிகள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், ஃபாக் விளக்குகளை ஆன் செய்வதற்கு முன்னர் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து கொள்ளுங்கள். ஏனெனில் ஃபாக் விளக்குகள் எதிர்வரும் வாகனங்களை விபத்துகளில் சிக்க வைப்பதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








