ஒரு சிலர் விஷயம் தெரியாம அசால்டா இருக்காங்க... ரோடு ஈரமா இருக்கப்ப தெரியாத்தனமா கூட இதை 'ஆன்' பண்ணீராதீங்க!
கார்களில் வழங்கப்படும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை எப்போதெல்லாம் பயன்படுத்த கூடாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நிறைய கார்களில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி வழங்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக நீங்கள் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, க்ரூஸ் கண்ட்ரோல் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதில் ஆபத்துக்களும் இருக்கின்றன.

டிரைவரால் 'செட்' செய்யப்படும் வேகத்தில் தொடர்ந்து பயணிக்க உதவி செய்வதுதான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் வேலை. உதாரணத்திற்கு நீங்கள் மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 'செட்' செய்து விட்டால், உங்கள் கார் தொடர்ந்து அதே வேகத்தில் பயணிக்கும். நீங்கள் மேனுவலாக பிரேக் அல்லது ஆக்ஸலரேட்டர் பெடல்களை மிதிக்காத வரை, கார் இந்த வேகத்தில் பயணித்து கொண்டே இருக்கும்.

நீங்கள் இந்த இரண்டையும் செய்து விட்டால், க்ரூஸ் கண்ட்ரோல் 'டீஆக்டிவேட்' ஆகி விடும். தேவையில்லாத சமயங்களில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நீங்கள் 'ஆஃப்' செய்து கொள்ளவும் முடியும். மேனுவலாக ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்து கொண்டே இருப்பதற்கு பதில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்துவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

ஆக்ஸலரேஷனை, அதாவது வேகத்தை, காரின் கம்ப்யூட்டர் கவனித்து கொள்ளும் என்பதால், நீங்கள் தேவை இல்லாமல் இன்ஜினை 'ரெவ்' (Rev) செய்ய மாட்டீர்கள். இதன் மூலம் எரிபொருள் மிச்சம் ஆகும். அத்துடன் இன்ஜின் சேதம் அடைவது குறைந்து, அதன் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நீங்கள் பயன்படுத்தினால், ஆக்ஸலரேட்டர் பெடலை மிதிக்க தேவை இல்லை. பொதுவாக கார் ஓட்டும்போது, ஆக்ஸலரேட்டர் பெடலை நாம் தொடர்ச்சியாக மிதித்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதற்கான அவசியத்தை க்ரூஸ் கண்ட்ரோல் இல்லாமல் செய்கிறது. எனவே உங்களுக்கு கால் வலி ஏற்படாது.

அத்துடன் ஆக்ஸலரேஷன் வேலையை காரின் கம்ப்யூட்டர் கவனித்து கொள்வதால், நீங்கள் ஸ்டியரிங் வீல் மற்றும் பிரேக் ஆகியவற்றில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும் முடியும். ஆனால் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியில் நிறைய நன்மைகள் இருக்கும் அதே சமயம், நாங்கள் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே கூறியபடி, இந்த வசதியில் ஆபத்துக்களும் உள்ளன.

எனவே க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை எப்போது பயன்படுத்த வேண்டும்? என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொலை தூர பயணங்களின்போது ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்து மிதித்து, டிரைவர்களின் கால்களில் வலி ஏற்படுவதை தவிர்ப்பதுதான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் மிகவும் முக்கியமான நோக்கம்.

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது மட்டுமே நீங்கள் க்ரூஸ் வசதியை பயன்படுத்த வேண்டும். அதுவும் அந்த சமயத்தில் சாலை ஈரம் இல்லாமல் இருப்பதும் அவசியம். அதேபோல் ஸ்பீடு லிமிட்டையும், அதாவது வேக வரம்பையும் (Speed Limit) சரியாக பின்பற்றுங்கள்.

உதாரணத்திற்கு ஒரு பகுதியில், மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றால், க்ரூஸ் கண்ட்ரோலில் அதற்கு குறைவான வேகத்தை மட்டும் 'செட்' செய்யுங்கள். அதேபோல் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது, உங்கள் கால்களை பெடல்களுக்கு அருகிலேயே வைத்து கொள்வதும் சிறந்தது.

திடீரென ஏதாவது அசம்பாவிதம் நிகழும் சூழல் ஏற்பட்டால், அதனை தவிர்க்க இது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். இவற்றுடன், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை எப்போதெல்லாம் பயன்படுத்த கூடாது என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்து கொண்டால், உங்கள் பயணம் அசம்பாவிதங்கள் இல்லாமல் சுகமாக அமையும்.

மழை வருகிறது என்றால், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் மேனுவலாக ஆக்ஸலரேட்டர் பெடலை கட்டுப்படுத்துவது நல்லது. அதேபோல் 'விஸிபிலிட்டி' (Low Visibility) குறைவாக இருக்கும் சமயங்களிலும், அதாவது உங்களால் சாலையை தெளிவாக பார்க்க முடியாத சமயங்களிலும், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம்.

மேலும் நகர பகுதிகளிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தாதீர்கள். நகர பகுதிகளில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் என பல்வேறு வேறுபாடுகள் இருக்கும். எனவே க்ரூஸ் கண்ட்ரோல் மூலம் குறைவான வேகத்தை 'செட்' செய்து பயணிப்பது கூட ஆபத்தானதுதான். நாங்கள் ஏற்கனவே கூறியபடி தேசிய நெடுஞ்சாலைகளுக்குதான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஏற்றது.

அதேபோல் சோர்வாக இருக்கும்போது கார் ஓட்டுவதை, க்ரூஸ் கண்ட்ரோல் வசதி எளிமையாக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது, சாலையில் இருந்து உங்களது கவனம் வேறு எங்கேயோ சென்று விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் நீங்கள் திடீரென தூங்கி விடக்கூடிய அபாயமும் உள்ளது.

எனவே க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். க்ரூஸ் கண்ட்ரோல் வசதி, உங்களுக்காக பிரேக் பிடிக்காது. உங்களுக்காக ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்தாது. இவை இரண்டையும் நீங்களேதான் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம். அதேபோன்று சாலை மிக ஈரமாக இருக்கும் சமயங்களிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் காரில் டிராக்ஸன் கண்ட்ரோல் வசதி இருந்தாலும் கூட, வானிலை மோசமாக இருக்கும் சமயங்களில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தாமல், ஆக்ஸலரேட்டர் பெடலை நீங்களாகவே மேனுவலாக கட்டுப்படுத்துவது சிறந்தது. இந்த சமயங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தினால், தேவையில்லாமல் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








