ரிப்பேர் எல்லாம் இல்ல... கார்கள் ரிவர்ஸில் வரும் போது "ஸ்ஸ்ஸ்..." என சத்தம் கேட்பதற்கு இது தான் காரணமா?
கார்கள் ரிவர்ஸ் கியரில் இயங்கும் போது மட்டும் "ஸ்ஸ்ஸ்..." என சத்தம் கேட்கும் இது ஏன் கேட்கிறது? மற்ற கியரில் ஏன் கேட்பதில்லை விரிவாகக் காணலாம்

ஒரு காருக்கு பெட்ரோல் தான் ரத்தம் இன்ஜின் தான் இதயம் என்றால் எலும்புகள் தான் கியர். கியர் இல்லாமல் இன்ஜின் ஓடினாலும் சரி கார் நகராது. இன்ஜின் சுற்றும் வேகத்தைச் சரியாக வேகத்தில் முறையாக வீல்களுக்கு கடத்தும் கருவி தான் கியர். கார் தற்போது இருக்கும் நிலையிலிருந்து எவ்வளவு அழுத்தம் இருந்தால் நகரும் என்பதை முடிவு செய்யவே கியர்கள் கொடுக்கப்பட்டது.

நிற்கும் நிலையிலிருக்கும் காரை நகர்த்த அதிக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு முதல் கியர் உதவும், ஏற்கனவே வேகமாகச் செல்லும் காரை மேலும் வேகத்தை அதிகரிக்க கியரை அதிகப்படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். இது எல்லாம் நமக்கு கார் ஓட்டும் போது தெரிந்த விஷயம் தான். இப்படியாக நாம் சாலையில் கார் ஓட்டும் போது கார்களில் செயல்படும் கியர்களிலிருந்து பெரிய அளவில் சத்தம் வராது.

அந்த சத்தம் எரிச்சலூட்டும் என்பதால் சத்தம் வராத அளவிற்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது கவனித்துள்ளீர்களா? கார்கள் ரிவர்ஸில் வரும் போது "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....." என ஒரு சத்தம் வரும் அது ரிவர்ஸில் வேகமாக வரவர சத்தம் அதிகமாகும். கார் முன்னே போகும் போது வராத இந்த சத்தம் ரிவர்ஸில் செல்லும் போது மட்டும் ஏன் ஏற்படுகிறது?

என்றாவது இது பற்றி யோசித்திருக்கிறீர்களா? இதோ இது பற்றி விளக்கத்தை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். கார் ரிவர்ஸில் வரும் போது ஏற்படும் இந்த சத்தத்தை இப்பொழுது மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். இதே சத்தத்தை நீங்கள் வேறு ஒரு இடத்திலும் கேட்க முடியும் எங்கு என ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

தெரியவில்லையா? நாங்களே சொல்கிறோம். கார் ரேஸ்களில் கார்கள் ரேஸில் செல்லும் போது இப்படியான சத்தம் வரும். ஆனால் ரேஸில் கார்கள் முன்னே செல்லும் போதே இந்த சத்தம் ஏற்பட்டுகிறது. ஆனால் சாலையில் நாம் பயன்படுத்தும் கார்களில் ரிவர்ஸில் செல்லும் போது மட்டும் தான் இந்த சத்தம் ஏற்படுகிறது. உடனே சாலையில் செல்லும் கார்கள் ரிவர்ஸ் கியரில் ரேஸ் கார்களாக மாறிவிடுகிறது எனத் தேவையில்லாத கற்பனைக்கு எல்லாம் செல்லாதீர்கள்.

நாம் சாலையில் பயன்படுத்தும் கார்களில் ரிவர்ஸில் வரும் போது ஏற்படும் சத்தத்திற்கும், ரேஸ்கார்கள் முன்னே செல்லும் போது ஏற்படும் சத்தத்திற்கும் ஒரே காரணம் தான் இருக்கிறது. இது கியரின் டிசைன் தான் இதற்கான முக்கியமான காரணம் முதலில் கார்கள் வடிவமைக்கப்பட்ட போது எல்லா கார்களிலும் இந்த சத்தம் வந்தது.

இந்த சத்தம் காரில் கியரிலிருந்து தான் ஏற்படுகிறது. இந்த சத்தம் எரிச்சலூட்டும் வகையில் இருப்பதால் இந்த சத்தத்தைக் குறைக்க வழி செய்ய வேண்டும் என நினைத்தனர். அதற்கான கியரில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். பொதுவாக கியர்களின் பல்கள் நேராக வெட்டப்பட்ட வடிவில் இருக்கும். அதை மாற்றிச் சறுகலாக வளைவுகளுடன் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் அந்த சத்தம் குறைந்தது.

இப்படியாகச் சறுகலாக வளைவுகளுடனான வெட்டுக்களைக் கொண்ட கியர்களுக்கு ஹெலிக்கல் கியர்கள் என்று பெயர். ஆனால் இந்த ஹெலிக்கல் கியர்களை தயாரிப்பதில் மேலும் சில சவால்களும் இருந்தன. நேராக வெட்டப்பட்ட கியர்கள். கியர் ஸாஃப்ட்களில் லோடை குறைவாகக் கொடுக்கும். அதனால் இதைத் தயாரிக்க ஏகப்பட்ட மெட்டிரியல்கள் இருக்கின்றன.

ஆனால் ஹெலிக்கல் கியர்கள் ஆக்ஸில்களுக்கு அதிகமாக லோடுகளை தரக்கூடியது. மேலும் இந்த கியர்களை வடிவமைப்பதும் பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்கு அதிக திறன் கொண்ட மிஷின்களும் தேவை ஆக்ஸில்களுக்கு அதிக லோடை கொடுப்பதால் ஹெலிக்கல் கியரை, நேராக கட் செய்யப்பட்ட கியர்களை காட்டிலும் சற்று ஹெவியாக செய்ய வேண்டும்.

இதையெல்லாம் கணக்கிட்டால் ஹெலிக்கல் கியரின் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. சாலையில் பயன்படுத்தப்படும் கார்களில் சத்தம் அதிகம் வந்தால் கார் ஓட்டிகளுக்கு எரிச்சலாக இருக்கும் என்பதால் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என ஹெலிக்கல் கியர்களை கொண்டே வடிவமைக்கின்றனர். ஆனால் சாலையில் செல்லும் கார்கள் ரிவர்ஸ் கியரை அதிகம் பயன்படுத்துவது கிடையாது.

அதனால் சாலையில் ஓடும் கார்களிலும் ரிவர்ஸ் கியரில் நேராக வெட்டப்பட்ட கியர்களே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீங்கள் சாலையில் செல்லும் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது மட்டும் "ஸ்ஸ்ஸ்ஸ்..." என்ற ஒரு சத்தம் கேட்கிறது. மற்ற எந்த கியரிலும் இந்த சத்தம் வருவதில்லை. ரேஸ்கார்களில் எல்லா கியர்களிலுமே ஸ்டிரைட் கட் கியர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் ரேஸ் கார்களில் ரிவர்ஸ் கியரிலும் சத்தம் ஏற்படுகிறது.

புதிதாக கார் வாங்கிய சிலர் இது குறித்து தெரியாமல் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது சத்தம் வருகிறது என சர்வீஸ் சென்டர்களை எல்லாம் அணுகியுள்ளனர். அங்குள்ள இன்ஜினியர்களும் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது சத்தம் வருவது சாதாரணம் தான் என சொல்லி திருப்பியனுப்பியிருக்கின்றனர். நம்மில் பலருக்கு இப்படி காரை ரிவர்ஸ் எடுக்கும் போது ஏன் "ஸ்ஸ்ஸ்...." என சத்தம் வருகிறது என இதுவரை தெரியாது. இப்பொது இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








