2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கார் போட்டியில் 3 எலக்ட்ரிக் கார்கள்!! தென்கொரிய பிராண்ட்கள் முன்னிலை
இந்த வருடத்திற்கான சிறந்த உலக கார் விருதிற்கான போட்டியில் மூன்று எலக்ட்ரிக் கார்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆண்டிற்கான சிறந்த உலக கார் விருதுகளின் 2022 எடிசன் விரைவில் நடைபெறவுள்ளது. வெற்றி பெற்ற மாடல்களை பற்றிய விபரங்கள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன. இதற்கிடையில் அவை என்னென்ன என்பது அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளது.

2022 உலகின் சிறந்த கார்களுக்கான விருதுகள் ஆறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. இவ்வாறான விருதுகள் முதன்முதலாக 2005இல் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய விருதுகளில் கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் கார்களின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. கடந்த 2021 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இறுதி செய்யப்பட்ட மூன்று மாடல்களில் இரு மாடல்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக இருந்தன.

ஆனால் இந்த ஆண்டு ஃபோர்டு மஸ்டங் மேக்-இ, கியா இவி6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 என மூன்று மாடல்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் தென்கொரிய எலக்ட்ரிக் கார்களான கியா இவி6 மற்றும் ஹூண்டாய் அயோனிக்5 மாடல்கள் ஒரே மாதிரியான ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறான தனித்துவங்களை பிராண்டை பொறுத்து பெற்றுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இவி6 எலக்ட்ரிக் மாடல் ஜிடி வெர்சனிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவி6 ஜிடி கார் ஆனது அதிகப்பட்சமாக 576 எச்பி இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக உள்ளது.

உலகின் சிறந்த கார் பிரிவில் மட்டுமின்றி, ஹூண்டாய் அயோனிக் 5 வேறு சில பிரிவுகளிலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த எலக்ட்ரிக் வாகனம் மற்றும் உலகின் சிறந்த கார் வடிவமைப்பு என்பவை அந்த இரு பிரிவுகளாகும். அதேபோல் கியா இவி6 மாடலும் உலகின் சிறந்த கார் வடிவமைப்பு 2022 பிரிவிலும் மூன்றில் ஒரு மாடலாக இடம் பிடித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த காராக இறுதி செய்யப்படாவிடினும், ஆடி இ-ட்ரான் ஜிடி வேறு 3 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் இரு விருதுகளை பெறும் நிலையில் உள்ளது. நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் வழங்கப்பட உள்ள 6 விருதுகளுக்கு பிரிவு வாரியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கார்களை தொடர்ந்து பார்ப்போம்.

உலக கார்
- ஃபோர்டு மஸ்டங் மேக்-இ
- ஹூண்டாய் அயோனிக் 5
- கியா இவி6
உலக எலக்ட்ரிக் வாகனம்
- ஹூண்டாய் அயோனிக் 5
- ஆடி இ-ட்ரான் ஜிடி
- மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ்

உலக நகர்புற கார்
- ஒபெல் மொக்கா
- டொயோட்டா யாரிஸ் க்ராஸ்
- ஃபோக்ஸ்வேகன் டைகுன்
உலக லக்சரி கார்
- பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்
- ஜெனெசிஸ் ஜிவி70
- மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ்

உலக செயல்திறன்மிக்க கார்
- ஆடி இ-ட்ரான் ஜிடி
- பிஎம்டபிள்யூ எம்3/ எம்4
- டொயோட்டா ஜிஆர்86/ சுபாரு பிஆர்இசட்
உலக கார் வடிவமைப்பு
- ஆடி இ-ட்ரான் ஜிடி
- ஹூண்டாய் அயோனிக் 5
- கியா இவி6

உலகின் சிறந்த கார் விருதுக்கு தேர்வு செய்யப்படும் கார்கள் குறைந்தது வருடத்திற்கு 10,000 யூனிட்களாவது தயாரிக்கப்பட வேண்டும். அதேபோல் முந்தைய ஆண்டு ஜனவர் 1ஆம் தேதியில் இருந்து விருதிற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு உள்ளாக குறைந்தப்பட்சம் இரு நாட்டு சந்தைகளிலாவது விற்பனையில் இருக்க வேண்டும். கடைசி நிபந்தனையாக, விற்பனை செய்யப்படும் நாட்டு சந்தையில் லக்சரி கார்களை காட்டிலும் குறைந்த விலையினை கொண்டிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








