ரீ-ஸ்டோர் செய்யப்பட்ட உலகின் மிக நீளமான கார்... நீச்சல் குளம், ஹெலிபேட்-னு எல்லாமே இந்த கார்ல இருக்கு!
உலகின் மிக நீளமான கார் மறு சீரமைப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் மிக நீளமான கார், கூடுதல் சிறப்பான வாகனமாக காட்சியளிக்கும் வகையில் தற்போது மறு சீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், 'தி அமெரிக்கன் ட்ரீம்' (The American Dream) காரை பற்றி தான் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் ஓர் வாகன ஆர்வலராக இருப்பின் நிச்சயம் இந்த காரை பற்றி கடந்த காலத்தில் படித்திருக்கக் கூடும்.

தி அமெரிக்கன் ட்ரீம் அதன் மிக நீளமான தோற்றத்திற்காக கின்னஸ் உலக சாதனையைப் படைத்த வாகனம் ஆகும். 30.54 மீட்டர் (100 அடி மற்றும் 1.50 அங்குலம்) அளவில் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அளவில் உலகில் வேறு எங்குமே காரை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் வாகனத்தை அதன் உரிமையாளர் தற்போது ரீ-ஸ்டோர் (புதுப்பித்தல்) செய்திருக்கின்றார்.

புதுப்பிக்கப்பட்டிருக்கும் உலகின் நீளமான காரின் படங்களை கின்னஸ் வேர்ல்டு ரெகார்டு அதன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. மேலும், இந்த காரில் நீச்சல் குளம், ஹெலி பேட் (ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான மேடை) உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது அதன் பதிவில் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஓர் செல்வந்தரே இக்காரின் உரிமையாளர் ஆவார். கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இந்த கார் 1986ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. அப்போது, 60 அடி நீளம் 26 வீல்களைக் கொண்டு மட்டுமே அது கொண்டிருந்தது. இக்காரின் முன் மற்றும் பின் வீல்களுக்கு இயங்கும் திறனை வழங்க வேண்டும் என்பதற்காக வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர் செய்யப்பட்ட சில கஸ்டமைசேஷன்களினால் 30.5 மீட்டர் நீளத்தை தி அமெரிக்கன் ட்ரீம் எட்டியது. இது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆறு ஹோண்டா சிட்டி செடான் கார்களின் நீளத்திற்கு சமம் ஆகும். 1976 கடில்லாக் எல்டோரடோ லிமோசைன் (1976 Cadillac Eldorado limousines) காரை தழுவியே இந்த உலகின் மிக நீளமான கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரை இரண்டு பக்கங்களில் இருந்தும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். இந்த கார் மிக நீளமானது என்பதால் திருப்புவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நடுவில் கீல் போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் நீச்சல் குளம் மட்டுமின்றி மினி கோல்ஃப் விளையாட்டு மைதானம், ஜகுஸி மற்றும் குளியல் டப் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கின்றன.
இதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் தி அமெரிக்கன் ட்ரீம் காரில் 75க்கும் அதிகமானோர் அமர்ந்து பயணிக்க முடியும். ஆகையால், இதனை மினி பார்டி ஹாலாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். டிவி-க்கள், குளிர்சாதன பெட்டி, டெலிஃபோன் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் உள்ளன. ஆகையால், மிக மிக சிறந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

எனவேதான் சில அமெரிக்க திரைப்பட இயக்குனர்கள் இக்காரை தங்களின் படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இக்கார் மறு சீரமைப்பு (ரீ-ஸ்டோர்) செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகின்றது. தற்போது காட்சிப்பொருளாகவும் இந்த கார் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








