எல்லாருக்கும் பிடிச்ச ஹோண்டா சிட்டி மாடல் பிரியாவிடை பெறுகிறது! கண்ணீருடன் வழியனுப்ப தயாரான ரசிகர்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள செடான் (Sedan) ரக கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). போட்டி அதிகமாகி கொண்டே வருவதால், இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தயாராகி வருகிறது.
2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் மார்ச் 2ம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள ஹோண்டா ஷோரூம்களில் 2023 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை நாம் காண முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து மார்ச் 3ம் தேதியில் இருந்து இந்த புதிய மாடலை வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்பதிவு தொடங்கியது!
2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக ஹோண்டா டீலர்ஷிப் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ள முடியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல் என்பதால், முன்பதிவு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிரியாவிடை பெறுகிறது!
தற்போதைய நிலையில் ஹோண்டா சிட்டி காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின்கள் ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

ஆனால் 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். ஹோண்டா சிட்டி காரில் இருந்து டீசல் இன்ஜின் பிரியாவிடை பெறுகிறது. இந்த டீசல் இன்ஜினை ஆர்டிஇ எனப்படும் ரியல் டிரைவிங் எமிஷன் (RDE - Real Driving Emission) விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் மேம்படுத்த போவதில்லை. எனவே டீசல் இன்ஜின் விலக்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி காரின் டீசல் இன்ஜின் ரசிகர்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
தற்போதைய நிலையில் ஹோண்டா சிட்டி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.87 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 15.62 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் புதிய 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்படி ஒரு நல்ல செய்தி இருக்கா!
ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடல் (Hybrid) e:HEV என்ற பெயரில் தனியாக விற்பனை செய்யப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய நிலையில் இந்த ஹைப்ரிட் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 19.89 லட்ச ரூபாய் ஆகும். இந்த ஹைப்ரிட் மாடலில் ஹோண்டா நிறுவனம் புதிதாக ஒரு சில வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை ஆரம்ப நிலை வேரியண்ட்களாக இருக்கும். எனவே தற்போது இருப்பதை காட்டிலும் குறைவான விலையில் ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடலை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். குறைவான விலையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் புதிய வேரியண்ட்கள் வரவுள்ளதாக கூறப்படும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடலின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








