எதிரிகளை சம்ஹாரம் செய்ய புதிய அவதாரம் எடுக்கிறது ஹோண்டா சிட்டி! நாளைக்கு லான்ச் ஆவதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, இது இந்திய வாடிக்கையாளர்களின் மனதிற்கு நெருக்கமான காராக உள்ளது. செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த ஹோண்டா சிட்டி காரை வாடிக்கையாளர்கள் பலரும் நேசிக்கின்றனர்.
இந்த சூழலில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் நாளை (மார்ச் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடல் குறித்த விரிவான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

2023 ஹோண்டா சிட்டி காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கூடிய செடான் காராக இது இருக்கும். 2023 ஹோண்டா சிட்டி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாவது கட்டத்திற்கு இணக்கமான பெட்ரோல் இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிட்டி காரின் வருகை, அதன் மிக முக்கியமான போட்டியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய செடான் ரக கார்களுக்கு புதிய ஹோண்டா சிட்டி விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) காருக்கும் இது சவால் அளிக்கும்.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் இந்திய சந்தையில் வரும் மார்ச் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது அதிகாரப்பூர்வமான அறிமுக தேதி ஆகும். இப்படி தொடர்ச்சியாக புதிய அப்டேட்களுடன் செடான் கார்கள் அறிமுகமாக தொடங்கியிருப்பதால், வரும் மாதங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போது எஸ்யூவி கார்கள்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. மறுபக்கம் செடான் ரக கார்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் புதிய ஹோண்டா சிட்டி மற்றும் புதிய ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களின் வருகை, செடான் செக்மெண்ட்டிற்கு புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே புதிய ஹோண்டா சிட்டி காரில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதால், அதன் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அனேகமாக 30 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேள்விக்கான பதில் நாளை நமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்து விடும்.


Click it and Unblock the Notifications








