செம்ம ஸ்டைலிஷாக மாறிய ஹூண்டாய் அவ்ரா செடான்!! 2023 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வெளியீடு... புக்கிங்ஸ் ஸ்டார்ட்!
ஹூண்டாய் அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய தோற்றத்தில் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் 2020இல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு அவ்ரா செடான் காரில் ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்துள்ள அப்டேட்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் 2020 ஜனவரி மாதத்தில் புத்தம் புதியதாக ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய செடான் கார் தான் அவ்ரா ஆகும். இந்த வகையில் பார்த்தோமேயானால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு அவ்ரா செடான் காருக்கு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன.

2023 அவ்ரா செடான் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 என்ற டோக்கன் தொகையில் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த அப்கிரேட்களின்படி, காரின் முகப்பு தோற்றம் மெருக்கேற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, புதிய தொழிற்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று முன்னதாக 2023 கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரும் வெளியீடு செய்யப்பட்டு இருந்தது, அதனை தொடர்ந்து தற்போது அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் கார்.
இந்த இரு புதிய ஹூண்டாய் கார்களும் விரைவில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளன. 2023 அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் காரின் முகப்பு பகுதியானது முன்பை காட்டிலும் நிமிர்ந்த தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் க்ரில் அமைப்பும் இரு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, க்ரில்லின் பெரும்பகுதிக்கும், பொனெட்டிற்கும் மத்தியில் மெல்லியதாக மேலும் ஒரு க்ரில் பகுதியை காண முடிகிறது. இந்த மெல்லிய க்ரில் பகுதியில் தான் ஹூண்டாயின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

கீழ்பகுதியில் இருக்கும் க்ரில் நன்கு அகலமானதாகவும், உயரமானதாகவும் வழங்கப்பட்டுள்ளதால் புதிய அவ்ரா காரின் முகப்பு பகுதியானது நமக்கு பருத்த தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதற்கேற்றாற் போல் க்ரில் பகுதிகள் புதிய அறுகோண பேட்டர்னில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய தலைக்கீழான L-வடிவ எல்இடி டிஆர்எல்-கள் பம்பரின் இரு முனைகளிலும் வழங்கப்பட்டுள்ளன. பம்பர் முன்பை காட்டிலும் கூர்மையான வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து அவ்ரா செடான் காரின் தோற்றத்தில் எந்த வித்தியாமும் இல்லை.
இன்னும் சொல்ல போனால், முந்தைய டிசைனிலேயே அலாய் சக்கரங்கள் தொடரப்பட்டுள்ளன. அதேபோல் காரின் பின்பக்கத்திலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 2023 கிராண்ட் ஐ10 நியோஸில் அலாய் சக்கரங்கள் மட்டுமின்றி, காரின் பின்பக்கத்திலும் குறிப்பிடத்தக்க அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 அவ்ராவின் பின்பக்கத்தில் ஒரேயொரு அப்டேட்டாக பூட்-லிட் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. அவ்ராவில் பூட்-லிட் ஸ்பாய்லர் ஆனது ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கூடுதல் ஆக்ஸஸரீயாகவே.

அது தற்போது நிலையான அம்சமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களுடன் புதிய அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு புதிய ஸ்டார்ரி நைட் நிறத்தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்பக்கத்தில் இருக்கைகளுக்கு புதிய அப்ஹோல்ஸ்டரியும், ஸ்டேரிங் சக்கரத்திற்கு புதிய லெதர் அலங்கரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்நுட்ப வசதிகளாக டைப்-சி சார்ஜிங் துளைகள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு புதிய 3.5 இன்ச் டிஜிட்டல் திரை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் காரில் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை கூடுதல் தொகையை செலுத்துவதின் மூலம் 6 ஆகவும் அதிகரித்து கொள்ள முடியும். அதேபோல் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோலையும் கூடுதல் ஆக்ஸஸரீயாக பெறலாம். இபிடி உடன் ஏபிஎஸ் ஆனது நிலையான அம்சமாகவே வழங்கப்படுகிறது. மற்றப்படி என்ஜின் தேர்விலும், கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அவ்ரா செடான் காரை சிஎன்ஜி தேர்விலும் தொடர்ந்து விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. 2023 அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எதுவும் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








