விலை கம்மினு குறைவா எடை போட்டுடாதீங்க... எந்த ஹைபிரிட் வசதியும் இல்லாமலேயே வெர்னா மைலேஜை வாரி வழங்கும்!
எந்த விதமான ஹைபிரிட் (Hybrid) தொழில்நுட்ப வசதியும் இல்லாமலேயே ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) அதிகம் மைலேஜ் தரும் செடான் ரக காராக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மைலேஜ் திறன் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் செடான் ரக கார் மடாலாக ஹோண்டா சிட்டி இருக்கின்றது. இந்த கார் ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாதது என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட ஹோண்டா சிட்டியே அதிகபட்ச மைலேஜை வழங்கக் கூடியதாக தேர்வாக உள்ளது.

ஒரு லிட்டருக்கே 27.13 கிமீ மைலேஜை அது வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 1.5 லிட்டர் மோட்டாருடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்துடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் வசதியும் வழங்கப்படுகின்றது. இவையே ஹோண்டா சிட்டியின் 27.13 கிமீ மைலேஜ் திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
இந்த அம்சம் அல்லாத ஹோண்டா சிட்டி ஒரு லிட்டருக்கு 17.8 கிமீ - 18.4 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்கும். இதைவிட சுமார் 10 கிமீ அதிக மைலேஜை தரக கூடியதாக சிட்டியின் ஹைபிரிட் ஆப்ஷன் இருக்கின்றது. இந்த நிலையில் ஹோண்டா சிட்டி போன்று எந்தவொரு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இல்லாமலேயே ஹூண்டாய் வெர்னா அதிகம் மைலேஜ் தரும் காராக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெர்னா செடான் ரக காரை நேற்றைய (மார்ச் 22) தினம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரு விதமான மோட்டார் தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும்.
இதில் முதலில் பார்த்த மோட்டார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.6 கிமீ முதல் 19.6 கிமீ வரை மைலேஜை வழங்கும் என ஹூண்டாய் வாக்குறுதி அளித்திருக்கின்றது. அதேவேளையில், அதன் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 20 கிமீ முதல் 20.6 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது.

மைல்டு அல்லது ஸ்ட்ராங் என எந்தவித ஹைபிரிட் அம்சமும் சேர்க்கப்படாத நிலையிலேயே வெர்னா இந்த அளவிற்கு அதிகம் மைலேஜ் தரும் காராக விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் நிறுவனம் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் உடன் 6 எம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வையும், ர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வில் 6 எம்டி மற்றும் 7 டிசிடி கியர்பாக்ஸ் தேர்வையும் ஆப்ஷனாக வழங்குகின்றது.
ஹூண்டாய் வெர்னா பிற போட்டி கார் மாடல்களான ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் ஆகியவற்றைக் காட்டிலும் சற்று அதிகம் மைலேஜை தரக் கூடியதாக இருக்கின்றது. கியர்பாக்ஸ் தேர்வை பொருத்து போட்டி கார் மாடல்களின் ஒரு சில வேரியண்டுகள் மட்டும் கணிசமான அளவு அதிக மைலேஜை வழங்குகின்றன.
ஆனால், வெர்னாவின் டர்போ பெட்ரோல் மோட்டாரின் மைலேஜ் திறன் முன்னாடி அனைத்தும் தோற்று நிற்கின்றன. ஆமாங்க, ஹோண்டா சிட்டி ஹைபிரிட்டிற்கு அடுத்தபடியாக மிக அதிக மைலேஜை வழங்கக் கூடியதாக ஹூண்டாய் வெர்னாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் இருக்கின்றது. விலையிலும் ஹூண்டாய் வெர்னாவே மலிவு விலை செடானாகக் காட்சியளிக்கின்றது.
புதிய ஹூண்டாய் வெர்னாவிற்கு ரூ. 10.90 லட்சம் தொடங்கி ரூ. 17.38 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஹோண்டா சிட்டி ரூ. 11.49 லட்சம் தொடங்கி ரூ. 20.45 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








