புதிய ஹூண்டாய் காரில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா! இது ஒன்னுக்காகவே கண்ணை மூடிகிட்டு காரை வாங்கலாம்!
இந்திய சந்தையில் செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி (SUV) ரக கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்த சூழலில் செடான் செக்மெண்ட்டை தூக்கி நிறுத்தும் வகையில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதிரடியான காரியம் ஒன்றை செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள செடான் ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய 2023 மாடலை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வரும் மார்ச் 21ம் தேதி, 2023 ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.

அதற்கு முன்னதாக புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் (Safety Features) குறித்த தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதன்படி 2023 ஹூண்டாய் வெர்னா காரில், 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) தொழில்நுட்ப வசதி, புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹூண்டாய் வெர்னா செடான் காரில் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன என கூறியிருந்தோம் அல்லவா? அப்படியானால், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த வசதிகள் இருக்கும். இதில் முக்கியமான ஒரு சில வசதிகளை நீங்கள் கீழே பார்க்கலாம்.

- 6 ஏர்பேக்குகள்
- ஏபிஎஸ் உடன் இபிடி
- ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்
- ரியர் பார்க்கிங் சென்சார்கள்
- பின் பகுதியில் டீஃபாகர்
- கீலெஸ் எண்ட்ரி
- லேன் சேஞ்ச் இன்டிகேட்டர்
- 3 பாயிண்ட் சீட் பெல்ட்
- அனைத்து இருக்கைகளுக்கு சீட் பெல்ட் ரிமைண்டர்
- ஸ்பீடு சென்சிங் டோர் லாக்
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இவை எல்லாவற்றையும் விட லெவல் 2 அடாஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுதான், புதிய ஹூண்டாய் வெர்னா காரின் முக்கியமான பேசு பொருள் ஆகும். இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் அடாஸ் வசதியுடன் கிடைக்கும் 2வது செடான் கார் என்ற பெருமையை புதிய ஹூண்டாய் வெர்னா பெற்றுள்ளது.
முன்னதாக ஹூண்டாய் வெர்னா காரின் மிக முக்கியமான போட்டியாளரான ஹோண்டா சிட்டி (Honda City) காரில், அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதி என்பதால், இதனுடன் விற்பனைக்கு வரும் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.
எனவே புதிய ஹூண்டாய் வெர்னா காரும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய ஹூண்டாய் வெர்னா காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








