டர்போ என்ஜினை எந்த கார் உடன் வாங்குவது சிறந்தது? புதிய ஹூண்டாய் வெர்னா -ஆ? (அ) ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் -ஆ?
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முற்றிலும் புதிய வெர்னா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்னாவின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, என்ஜின் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வெர்னாவில் டீசல் என்ஜின் தேர்வு நீக்கப்பட்டுள்ளது.
வழக்கமான 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் தொடரப்பட்டுள்ளது. டீசல் என்ஜினிற்கு மாற்றாக புதியதாக 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெர்னா டர்போ கார் நேரடியாக அதன் போட்டி மாடலான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸின் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் வேரியண்ட்டிற்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்த இரு டர்போ செடான் கார்களை பற்றி இனி முழுமையாக பார்க்கலாம்.

என்ஜின்
இந்திய செடான் கார்கள் வரிசையிலேயே ஆற்றல்மிக்க டர்போ என்ஜினை கொண்ட காராக ஹூண்டாய் வெர்னா 1.5 லிட்டர் டர்போ கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆனது அதிகப்பட்சமாக 157.8 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
மறுப்பக்கம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காரில் பொருத்தும் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வெர்னாவின் டர்போ என்ஜினை விட சற்று குறைவாக 147.5 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை காருக்கு வழங்குகிறது. விர்டுஸ் செடானில் டர்போ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே பெற முடிகிறது.

தொழிற்நுட்ப வசதிகள்
புதிய வெர்னா காரில் மிக முக்கிய சிறப்பம்சமாக லெவல்-2 அடாஸ் தொகுப்பை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனுடன், ஹீட்டட் & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உடன் பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் பூட், எலக்ட்ரிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவையும் புதிய வெர்னாவில் வழங்கப்பட்டுள்ளன.
வெர்னாவை போன்று மாடர்ன் செடான் காராக சமீபத்தில் அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸிலும், கனெக்டட் கார் தொழிற்நுட்பம், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த காரில் அடாஸ் வழங்கப்படுவதில்லை. அதேபோல் இந்த காரில் சற்று சிறியதாக 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை பொருத்தப்படுகிறது.

விலை
அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்னா காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ஹூண்டாய் நிறுவனம் ரூ.10.90 லட்சத்தில் இருந்து நிர்ணயித்துள்ளது என்றாலும், வெர்னாவின் டர்போ வெர்சனை ரூ.14.83 லட்சத்தில் இருந்தே வாங்க முடியும். மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெர்னா டர்போ காரின் விலை ரூ.16.08 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்க, 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் ரூ.17.32 லட்சமாக கொண்டுவரப்பட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸை பொறுத்தவரையில், இந்த காரில் டர்போ என்ஜின் டாப் ஜிடி ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.42 லட்சம் ஆகும். இதனால் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களில் முன்னிலையில் இருப்பது மட்டுமின்றி, பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலையிலும் வெர்னாவை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications








