கூகுளில் இந்த 5 கார் பிராண்டுகளைதான் எல்லாரும் அதிகம் தேடி பார்த்திருக்காங்க.. வெறிக் கொண்டு தேடி இருக்காங்க!
இந்தியர்கள் அதிகம் கூகுள் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்துக் கொள்ள அவர்கள் இதையே முக்கிய தளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தலை வலிக்கான நிவாரணி மருந்தைத் தேடுவது தொடங்கி காலுக்கு போடும் செருப்பு வாங்குவது வரை என அனைத்திற்கும் நம்ம ஆட்கள் கூகுளையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியர்கள் மட்டுமில்லைங்க உலகின் பிற நாட்டு மக்களும் கூகுளையே தகவல்களை அறிந்துக் கொள்ளப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே உலக அளவில் நடப்பு 2023 ஆண்டில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகள் எவை என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பதிவில் நாம் டாப் 5 அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் லிஸ்டையே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா (Toyota): உலக அளவில் அதிகம் தேடப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனமாக டொயோட்டா காட்சியளிக்கின்றது. இந்த ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனத்தை 64 நாடுகளில் உள்ள மக்கள் மிக அதிகளவில் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆகையால், உலக அளவில் அதிகம் தேடப்பட்ட கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் டொயோட்டா முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இந்த நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்த இந்த இடத்தை தக்க வைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், கார் விற்பனையிலும் இந்த நிறுவனம் முன்னணி இடத்தில் இருக்கின்றது. நீடித்து உழைக்கும் தன்மைக்கு பெயர்போனவையாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெஸ்லா (Tesla): இந்த நிறுவனத்தை உலகில் 29க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் அதிகம் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆகையால், இது இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கின்றது. இந்த கார் பிராண்டின் மிக முக்கியமான தயாரிப்பாக மாடல் 3 மற்றும் மாடல் ஒய் இருக்கின்றன. இதற்காக இந்த கார் பிராண்டை தேடியவர்களே அதிகம்.
இதேபோல், இந்த பிராண்டின் சைபர் டிரக்கிற்காகவும் பலர் டெஸ்லாவை அதிகம் பார்த்திருக்கின்றனர். டெஸ்லா ஓர் அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். மேலும், இது ஓர் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமும்கூட. பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட பிராண்டுகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உலக நாடுகளில் டெஸ்லாவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ (BMW): 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் லிஸ்டில் பிஎம்டபிள்யூ மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இது ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி உள்ளிட்ட பிராண்டுகளுக்கு மிகப் பெரிய போட்டியாக இந்த கார் உற்பத்தி நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
26க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த கார் பிராண்டை கூகுள் செய்து பார்த்து இருக்கின்றனர். இதன் விளைவாகவே இந்த இடத்தை பிஎம்டபிள்யூ பிடித்து இருக்கின்றது. கடந்த ஆண்டில் இந்த பிராண்டே இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் இடத்தையே டெஸ்லா தற்போது தட்டி பறித்து இருக்கின்றது.

ஆடி (Audi): இந்த கார் பிராண்ட் 7 நாடுகளில் அதிகம் தேடி பார்த்த பிராண்டாக இருக்கின்றது. ஆகையால், நான்காவது இடத்தை ஆடி பிடித்திருக்கின்றது. சென்ற ஆண்டிலும் இதே இடத்தையே ஆடி பிடித்திருந்தது. ஆனால், 2022இல் இந்த கார் பிராண்டை 9 நாடுகளில் அதிகம் தேடி பார்த்த பிராண்டுகளில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இதனாலேயே அது உலக அளவில் அதிகம் தேடி பார்த்த கார் பிராண்டுகளின் பட்டியலில் 4 இடத்தைப் பிடித்திருந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz): சென்ற ஆண்டில் உலக அளவில் மிக அதிகமாக தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியலில் இந்த நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டோ இது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. ஆறு நாடுகளில் மட்டுமே இந்த காரை அதிகம் மக்கள் தேடிப் பார்த்திருக்கின்றனர். 2022இல் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகம் பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மாடலை மட்டுமல்ல கார் பிராண்டையும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான புதிய காரை வாங்க அவர்கள் முனையும்போது அந்த பிராண்டைப் பற்றி அதிகம் மக்கள் ஆராயுகின்றனர். இதன் அடிப்படையில், இப்போதும் டொயோட்டாவிற்கு உலக நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









