ஆஹோ, ஓஹோனு சொன்னாங்க... ஆனா இந்த 5 அம்சங்களை ஹூண்டாய் வெர்னால கொடுக்கவே இல்ல! கொஞ்சம் ஏமாற்றம்தான்!
ஹூண்டாய் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 வெர்னா செடான் காரை இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்குக் களமிறக்கியது. இதுவரை இல்லாத படுகவர்ச்சியான வாகனமாக அதனை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. ஆட்டோ துறை சார்ந்த வல்லுநர்கள் பலர் இந்த கார் எஸ்யூவி கார்களுக்கு டஃப் கொடுக்கும் என கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கேற்ப சிறப்பு வசதிகளையும், சொகுசு வசதிகளையும் இந்த காரில் ஹூண்டாய் வாரி வழங்கி இருக்கின்றது. ஆனால், ஒரு சில மிக முக்கியமான அம்சங்களை ஹூண்டாய் 2023 வெர்னாவில் வழங்க தவறிவிட்டது. அந்த அம்சங்கள் இடம் பெறாதது வாகன பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அப்படி என்ன அம்சங்கள் எல்லாம் இந்த வாகனத்தில் கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, தவிர்க்கப்பட்ட ஐந்து முக்கியமான அம்சங்களையும் இந்த பதிவில் பட்டியலிட்டு காட்டி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.
டீசல் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை: இந்தியாவில் இப்போதும் டீசல் கார்களுக்கு சற்று மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் ஒற்றை தேர்வாகக் கூட வெர்னாவில் டீசல் ஆஃப்ஷனை வழங்கவில்லை. முந்தைய தலைமுறை வெர்னாவில் இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டது. ஆனால், புதிய விதிகளின் கெடுபிடி காரணமாக அதனை வெளியேற்றியது.

இந்த நிலையில் புதிய வெர்னாவில் அப்டேட்டுகளுடன் டீசல் ஆப்ஷன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனை ஹூண்டாய் செய்யவில்லை. இந்தியாவில் சொற்பமான அளவிலேயே டீசல் எஞ்ஜின் கொண்ட செடான் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இன்னும் கூடுதல் தகவலாக, மலிவு விலையில் ஒரு டீசல் செடான் கார்கூட விற்பனைக்கு கிடைக்காத நிலையே தென்படுகின்றது.
எனவேதான் 2023 வெர்னாவில் டீசல் மோட்டார் வழங்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதேபோல், நாட்டு மக்கள் மத்தியில் ஹைபிரிட் வாகனங்களுக்கும் மிக மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த வசதியையும் ஹூண்டாய் 2023 வெர்னாவில் வழங்கவில்லை.
360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா கொடுக்கப்படவில்லை: நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சமாக 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள் இருக்கின்றன. ஆனால், இந்த அம்சத்தை ஹூண்டாய் தனது வெர்னா காரில் வழங்கவில்லை. பார்க்கிங் மற்றும் காரை சுற்றி நிகழக் கூடியவற்றை எளிதில் பார்க்க இந்த கேமிரா உதவும். இத்தகைய அம்சத்தையே ஹூண்டாய் வழங்கவில்லை.
10.25அங்குல திரையில் வயர்லெஸ் இணைப்பு வழங்கப்படவில்லை: ஹூண்டாய் வெர்னாவின் ஆரம்ப நிலை வேரியண்டுகளில் 8.0அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை வயர்லெஸ் இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், உயர்நிலை தேர்வுகளான 10.25 அங்கு திரையில் இந்த வசதி வழங்கப்படவில்லை. இதுவும் ஓர் வறுத்தம் அளிக்கும் தகவல் ஆகும். ஆனால், விரைவில் இந்த அம்சத்தை ஓடிஏ அப்டேட் வாயிலாக வழங்க இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

பனி மின் விளக்கு மற்றும் மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வசதியும் வழங்கப்படவில்லை: புதிய ஹூண்டாய் வெர்னாவில் ஸ்பிளிட் ரக ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முகப்பு பகுதியின் முழு நீளத்தை ஆளும் வகையில் மெல்லிய பகல்நேர எல்இடி லைட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், பனி மின் விளக்கை வழங்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மேலே பார்த்தவையே ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்ட அம்சங்களின் பட்டியல் ஆகும். அவை மட்டுமின்றி, மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் சென்சார்கள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய பவர் இருக்கை ஆகியவையும் 2023 ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்படவில்லை. இவற்றை ஹூண்டாய் வழங்கி இருக்கலாம் என்பதே எங்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications









