ஆட்டோமேட்டிக்கா நிறைய வேலையை அதுவே பாத்துக்கும்!! ஜீப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய காம்பஸ் கார்!
2024 ஜீப் காம்பஸ் (2024 Jeep Compass) கார் ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய காம்பஸ் காரில் மிக முக்கியமான அம்சமாக புதிய அடாஸ் (ADAS) வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் காரை பற்றியும், அதில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் இருந்து பல முன்னணி கார் நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. அத்தகைய அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று ஜீப் ஆகும். இந்த நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலாக காம்பஸ் விளங்குகிறது. 5 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி காரான காம்பஸ் இந்திய மார்க்கெட்டிலும் ஓரளவிற்கு நன்றாகவே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஜீப் காம்பஸ் காரின் குறை என்றால், அதன் அதிகமான விலை ஆகும். ஆனால், காம்பஸ் காருக்கு ஜீப் நிர்ணயிக்கும் விலை ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு பெரியதாக பிரச்சனையாக இல்லை. இதனால்தான், மெருக்கேற்றப்பட்ட 2024 காம்பஸ் கார் முதலாவதாக ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 2024 காம்பஸ் கார் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், புதிய காம்பஸ் காரில் முக்கிய அம்சமாக அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் என்பதன் சுருக்கமான அடாஸ் 2ஆம் லெவலில் 2024 காம்பஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது.

அடாஸ் மூலமாக, ஆக்டிவ் பிரேக்கிங் உடன் ஃபுல் ஸ்பீடு ஃபார்வேர்ட் கொலிஷன் வார்னிங், ஆக்டிவ் லேன் மேனேஜ்மெண்ட், ரியர் கிராஸ் பாத் டிடெக்ஷன், டிரைவர் தூங்குவதை கண்டறியும் வசதி, பாதையில் இடையூறாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டியை அடையாளம் கண்டால் தானாக இயங்கும் அவசரகால பிரேக் வசதி உள்ளிட்டவற்றை 2024 ஜீப் காம்பஸில் பெற முடியும்.
ஆனால் அடாஸை பெற வேண்டுமெனில், 2024 காம்பஸ் காருடன் பிரீமியம் பேக்கை வாங்க வேண்டும். மேலும், ஐரோப்பாவில் காம்பஸ் காரில் 80க்கும் அதிகமான பாதுகாப்பான வசதிகள் இடம்பெற்று உள்ளன. இவற்றுடன், இன்-கார் கனெக்டட் வசதிகள், பேட்டரி எஃபிசியன்சி உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ள புதிய காம்பஸ் காரை 18-இன்ச் அல்லது 19-இன்ச் டயர்களுடன் ஜீப் விற்பனை செய்யவுள்ளது.

ஐரோப்பாவில் ஜீப் காம்பஸ் ஆனது ஹைப்ரீட் காராக வழங்கப்படுகிறது. 2024 காம்பஸில் 48 வோல்ட் பேட்டரி பேக்கை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் உடன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 132 பிஎஸ் வரையிலும், எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக கூடுதலாக 20 பிஎஸ் இயக்க ஆற்றலையும் பெறலாம்.
ஐரோப்பாவில் காம்பஸ் காரில் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அத்துடன், ஆட்டோ, ஸ்னோ, மணல்/சகதி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோட்களும் கொடுக்கப்படுகின்றன. வழக்கம்போல், 2024 ஜீப் காம்பஸ் கார் அல்டிட்யூட், சம்மிட், ஓவர்லேண்ட் மற்றும் டிரைல்ஹாவ்க் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஆஃப்-ரோடு பயணத்திற்கு ஏற்ற டிரைல்ஹாவ்க் வேரியண்ட்டில் மட்டும் கூடுதலாக ராக் டிரைவ் மோட் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகில் பல நாடுகளில் ஜீப் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய காராக காம்பஸ் விளங்குகிறது. இதனால்தான், குறிப்பிட்ட கால இடைவெளியில் காம்பஸை ஜீப் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இருப்பினும், 2024 காம்பஸ் காரின் தோற்றம் எந்த அப்டேட்டையும் பெறவில்லை. தொழிற்நுட்ப அம்சங்களில் மட்டுமே காம்பஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









