சம்பவம் லோடிங்! டொயோட்டா இன்னோவா கதையை முடிக்க வரும் உல்லாச கப்பல்! கொலசாமிய நல்லா வேண்டிக்க மாமே!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்தது.
ஆனால் அரசின் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய சந்தையில் கியா கார்னிவல் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும் இந்திய சந்தையில் வெகு விரைவில் கியா கார்னிவல் 'கம்பேக்' கொடுக்கவுள்ளது. ஆம், 2024 கியா கார்னிவல் காரின் உலகளாவிய அறிமுக நிகழ்ச்சி, தென் கொரியாவில் (South Korea) வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

அதை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டில், கியா கார்னிவல் கார், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக 2024 கியா கார்னிவல் காரின் அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டிவிசி ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட 2024 கியா கார்னிவல் காரின் உருமறைப்பு செய்யப்படாத புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே 2024 கார்னிவல் காரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வழியாக நமக்கு 2024 கியா கார்னிவல் காரின் தரிசனம் கிடைத்துள்ளது.

டிசைன் (Design) என்ற அம்சத்தை பொறுத்தவரையில், கியா கார்னிவல் காரின் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி முன் மற்றும் பின் பகுதிகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு துள்ளலான புதிய டிசைனை கியா நிறுவனம் வழங்கியுள்ளது.
இதன்படி முன் பகுதியில் புதிய ஹெட்லைட்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதே போல் முன் பக்க க்ரில் அமைப்பின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. க்ரில் தற்போது இன்னும் பிரீமியம் ஆக இருப்பதுடன், பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், சற்று பெரியதாக இருப்பதை போல் தோன்றுகிறது. இதுதவிர முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பின் பகுதியை பொறுத்தவரையில், டெயில்கேட் புதியதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதிய டெயில்லைட் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அலாய் வீல்களுக்கு கியா நிறுவனம் புதிய டிசைனை வழங்கி அமர்க்களப்படுத்தியுள்ளது. ஆனால் 2024 கியா கார்னிவல் காரின் இன்டீரியர் புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது சற்று வருத்தமான விஷயம்தான்.
எனினும் இன்டீரியரில் கியா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை (Features) வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 2024 கியா கார்னிவல் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு ஹைப்ரிட் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். ஆனால் இந்திய சந்தையில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024 கியா கார்னிவல் காரின் வருகை, இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) போன்ற கார்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் புதிய மாடலின் வருகைக்கு பின், கியா கார்னிவல் காரின் விற்பனை முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









