கார் கம்மியான விலையில் கிடைச்சாலும், இவ்வளவு வசதிகள் இருக்கும்!! கியா நிறுவனத்துக்கு ரொம்ப தாராள மனசு!
2024 கியா சொனெட் (Kia Sonet) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய கியா காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் குறைந்த விலையில் கிடைக்கும் சொனெட் கார் எவ்வாறானதாக இருக்கும் என்பதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
கியா நிறுவனம் அதன் பிரபலமான சொனெட் காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்துள்ளது. புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் இருந்து இன்று (டிசம்பர் 14) உலகளவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சொனெட் காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 2024 சொனெட் காரின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 2024 கியா சொனெட் கார் மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில், 11 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 7 வேரியண்ட்களில் எச்.டி.இ என்பது எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் ஆகும்.
விலை குறைவான சொனெட் வேரியண்ட்டாக இருப்பினும், மற்ற வேரியண்ட்களில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இந்த வேரியண்ட்டிலும் கிடைக்கவுள்ளன. அதேநேரம், சில வசதிகள் எச்.டி.இ வேரியண்ட்டில் இல்லை. வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் எச்.டி.இ வேரியண்ட் முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லேம்ப்களையும், டெயில்லைட்களையும் கொண்டுள்ளது.

காருக்கு பின்னால், டெயில்லைட்களை இணைக்கும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் இந்த வேரியண்ட்டிலும் கிடைக்கும். காருக்கு முன்னாலும், பின்னாலும் பம்பர்களின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. சக்கரங்கள் 15 இன்ச்சில் இரும்பு சக்கரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. 4 சக்கரங்களுக்கும் சில்வர் நிறத்தில் வீல் கவர்கள் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.
இவற்றுடன், சில்வர் ஸ்கிட் தட்டுகள், மின்கம்பம் டிசைனில் ஆண்டென்னா மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்குகள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. காருக்கு உள்ளே சாய்த்து அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், முன்பக்கத்தில் பவர் விண்டோக்கள், ரியர் ஏசி வெண்ட்ஸ் மற்றும் முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஸ்டோரேஜ் உடன் நகர்த்த முடியாத ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவற்றை 2024 சொனெட் எச்.டி.இ வேரியண்ட் கொண்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹைலைன் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் போன்றவற்றை இந்த விலை குறைவான சொனெட் காரிலும் பெறலாம். ஏற்கனவே கூறியதுபோல், விலையுயர்ந்த எக்ஸ்-லைன் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் சில வசதிகளை இந்த கார் இழந்துள்ளது.
அவையாவன, 4-வழிகளில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 360-டிகிரி கேமரா, லெவல் 1 அடாஸ், ரியர் பார்சல் ட்ரே, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் உள்ளிட்டவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா சொனெட் போன்ற சிறிய அளவிலான கார்களை வாங்கும் மிடில்-கிளாஸ் மக்களால் அந்த காரை குறைந்த விலையிலேயே வாங்க இயலும். ஆதலால், சொனெட் போன்ற கார்களின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் எத்தகைய அம்சங்கள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









