நம்ம ஊர் டாடா காரா? (அ) கொரியன்-ஸ்டைல் கியா காரா? எதை வாங்குவது? இரண்டும் லேட்டஸ்ட் மாடர்ன் கார்கள்!!
2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift) கார் கடந்த வாரத்தில் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி கார் வருகிற ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையில் புதிய சொனெட் காருக்கு டாடா நெக்ஸான் முக்கிய போட்டியாக விளங்கும்.
ஏனெனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் நெக்ஸான் காரை சமீபத்தில்தான் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்திருந்தது. அதன்பின், கடந்த சில மாதங்களாக டாடா நெக்ஸான் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. நெக்ஸான் காரின் போட்டியை புதிய சொனெட் கார் சமாளிக்குமா? இந்த இரு எஸ்யூவி கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

பரிமாண அளவுகள்: பழைய சொனெட் காரை காட்டிலும் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் பெரியதாக உள்ளது. புதிய சொனெட் காரின் நீளம் 3,995மிமீ, அகலம் 1,790மிமீ ஆகும். பழைய சொனெட்டை காட்டிலும் இந்த அளவுகள் பெரிய அளவில் அதிகம் இல்லை. ஆனால், புதிய சொனெட் கார் கிட்டத்தட்ட 32மிமீ உயரம் அதிகம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காருடன் ஒப்பிடுகையில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் அளவில் சிறியது என்றாலும், 14மிமீ கூடுதல் அகலம் கொண்டதாக உள்ளது. மற்றப்படி, நீளம் மற்றும் உயரத்தில் நெக்ஸான் மாடல் சிறியது ஆகும். புதிய நெக்ஸான் காரை மொத்தம் 11 விதமான வேரியண்ட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. அதுவே, சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை 7 விதமான வேரியண்ட்களில் கியா விற்பனை செய்யவுள்ளது.

வசதிகள்: புதிய சொனெட் காரை கியா நிறுவனம் தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கதாக உருவாக்கி உள்ளது. குறிப்பாக, சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரில் அடாஸ் (ADAS) தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அடாஸ் மூலமாக 10 அட்வான்ஸ்டு வசதிகளை பெறலாம். அவை இல்லாமல், 6 ஏர்பேக்குகள் என 25 பாதுகாப்பு வசதிகளையும் புதிய சொனெட் பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகள் 2024 சொனெட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும்.
டாடா நெக்ஸான் மட்டுமல்ல, இந்தியாவில் எந்தவொரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் தற்போதைக்கு அடாஸ் வழங்கப்படுவது இல்லை. புதிய நெக்ஸானில் டேஸ்போர்டில் இரு திரைகளுடன் உட்பக்க கேபின் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 2024 சொனெட் காரை போல கனெக்டட் கார் தொழிற்நுட்பத்தை புதிய நெக்ஸான் காரும் கொண்டுள்ளது. 360-டிகிரி கேமரா மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்டவை புதிய நெக்ஸானின் சிறப்பம்சங்கள் ஆகும்.

என்ஜின்: புதிய சொனெட் காரை 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்ய கியா திட்டமிட்டுள்ளது. இதே என்ஜின் ஆப்ஷன்கள் தான் தற்போதைய சொனெட் காரிலும் வழங்கப்படுகின்றன.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிஏ கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசல் என்ஜின் உடன் ஏஎம்டி மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இரண்டும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்றாலும், டிசைனில் இரண்டும் பெரிதும் வித்தியாசப்படுகின்றன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பழைய சொனெட் காரை விட புதிய சொனெட் தொழிற்நுட்ப ரீதியாகவே அப்டேட் செய்யப்பட்டுள்ளது, தோற்றத்தில் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஆனால், டாடா நெக்ஸான் கார் முற்றிலுமாக புதுமையான தோற்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









