2024 Maruti Swift காரில் இப்படி ஒரு இன்ஜினா? மைலேஜ் 30-40 வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்னும் இல்ல!
மாருதி சுஸூகி நிறுவனம் ஏற்கனவே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி லைஃப்ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி இந்த மாத இறுதியில் ஃப்ரான்க்ஸ் காரும், மே மாத மத்தியில் ஜிம்னி காரும் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த அறிமுகத்திற்கு மாருதி நிறுவனம் சில கார்களை தயார் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி சி செக்மெண்டில் ஒரு எம்பவி கார் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் மாருதி வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக புதிய தலைமுறை ஸ்விஃப்ட், டிசையர், 7-சீட்டர் கிராண்ட் விட்டாரா, எலெக்ட்ரிக் எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட இவிஎக்ஸ் கான்செப்ட் காரின் முழு வெர்ஷன் ஆகிய கார்களை உருவாக்கும் பணியில் தற்போது மாருதி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரின் புதிய தலைமுறை கார்களை தான். இந்த கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. பலர் இந்த ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்த இரண்டு கார்களை பற்றி புதிதாக நமக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த இரண்டு கார்களிலும் பூஸ்டர்ஜெட் இன்ஜின் ஒரு இன்ஜின் ஆப்ஷனாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இந்த இரு கார்களும் இந்தாண்டு இறுதி அல்லது 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்கு அறிமுகமாகலாம்.
ஆனால் இந்த அறிமுகம் முதலில் இந்தியாவில் இல்லை. முதலில் ஜப்பான் மார்கெட்டிற்கு தான் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் முதலில் ஸ்விஃப்ட் கார் அறிமுகமாகும் அதன் பின்னர் தான் டிசையர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை இந்த கார்களில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அத்துடன் சேர்த்து 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜினும் இணையும் எனக் கூறப்படுகிறது.
மக்கள் பலர் ஸ்விஃப்ட் காரில் ஸ்போர்ட் வேரியன்டை எதிர்பார்த்த நிலையில் அதிக மைலேஜ் தரும் வேரியன்டாக 1.0லிட்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின் உடன் ஆர்எஸ் வேரியன்ட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான்.
இந்த 1.0 லிட்டர் டர்போ ஜெட் இன்ஜின் மாருதி நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு இன்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜின் தற்போது பலேனோ ஆர்எஸ் வேரியன்டின் காரில் இருக்கிறது.
இந்த வேரியன்ட் மார்கெட்டில் உள்ள டர்போ இன்ஜின்களான ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









