சொகுசு கப்பல் கூட தோற்று போயிடும்!! அரசியல்வாதிகள் இப்போதே புக் செய்ய தயார் - இந்தியாவிற்கு எப்போது வருமோ!
ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் 2024ஆம் ஆண்டிற்காக மெருக்கேற்றப்பட்ட வி-கிளாஸ் எம்பிவி காரை சர்வதேச சந்தையில் வெளியீடு செய்துள்ளது. 2024 மெர்சிடிஸ் வி-கிளாஸ் கார் அப்டேட்டான டிசைனில், கூடுதல் லக்சரி & தொழிற்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
உலக நாட்டு சந்தைகளில் மெர்சிடிஸ் வி-கிளாஸ் எம்பிவி கார்கள் மொத்தம் 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வி-கிளாஸ், வி-கிளாஸ் மார்கோ போலோ மற்றும் இ.க்யூ.வி என்பவை அந்த 3 ஆகும். இவை அனைத்தையும் புதிய 2024ஆம் ஆண்டிற்காக மெருக்கேற்றி உள்ள மெர்சிடிஸ் நிறுவனம் லக்சரி அனுபவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

2024 மெர்சிடிஸ் வி-கிளாஸ் கார் ஸ்டைல், அவாண்ட்கார்ட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. காரில் முக்கிய மாற்றங்கள் அனைத்தும் முகப்பு பகுதியில் தான் கொண்டுவரப்பட்டு உள்ளன. முக்கியமாக, காரின் முகப்பு பகுதியில் கிரில், முன்பை விட பெரியதாக்கப்பட்டு உள்ளது. அத்துடன், கிரில் பகுதியில் சில ஒளிரும் பாகங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.
மேற்கூறப்பட்ட 3 வேரியண்ட்களில், டாப் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் முன்பக்க பொனெட் பகுதியில் பிரத்யேகமான மெர்சிடிஸ் முத்திரை பொருத்தப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தில், பல்வேறு பீம்கள் இணைக்கப்பட்டதாக எல்இடி தரத்தில் ஹெட்லைட்கள் உள்ளன. பின்பக்க எல்இடி டெயில்லைட்களின் டிசைனும் திருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் 2024 மாடலில் ஸ்மோக்டு எஃபெக்ட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளன.

அலாய் சக்கரங்களின் டிசைனும் திருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச்களில் இருந்து 19 இன்ச் வரையில் கிடைக்கக்கூடிய இந்த அலாய் சக்கரங்களை 5 விதமான நிறங்களில் அறிமுகப்படுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட 2024 மெர்சிடிஸ் வி-கிளாஸ் எம்பிவி காரில் மிக முக்கிய அப்டேட் உட்பக்க டேஸ்போர்டில் தான் கொண்டுவரப்பட்டு உள்ளது. புதிய டேஸ்போர்டு செட்-அப் காரின் கேபினை அடுத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
2024 வி-கிளாஸின் டேஸ்போர்டில் 12.3-இன்ச்களில் இரு திரைகள் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என வழங்கப்பட்டுள்ளன. புதிய டேஸ்போர்டிற்கு ஏற்ப டேஸ்போர்டில் வழங்கப்படும் ஏசி காற்று துளைகளின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. டேஸ்போர்டிற்கு கீழே மைய கன்சோல் பகுதியில் மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பேட் உள்ளதை படங்களில் பார்க்க முடிகிறது.

காரின் உட்பக்க கேபினில் வழங்கப்பட்டுள்ள மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், மெமரி டிரைவர் சீட், நேரலை போக்குவரத்து தகவல்கள் உடன் சாட்-நாவ் மற்றும் கீலெஸ் ஸ்டார்ட் உள்ளிட்டவற்றை சொல்லலாம். உயர் நிலை வேரியண்ட்டான எக்ஸ்க்ளூசிவ்-இல் ஹீட்டட் நப்பா லெதர்-ஆல் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், டிண்டு பின் ஜன்னல் கண்ணாடிகள், 64 விதமான நிறங்களில் ஒளிரக்கூடிய கேபின் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் இரவு நேர டிரைவிங்கிற்கு உதவியாக பின் விளக்குகளை டிம்-ஆக்கக்கூடிய வசதி மற்றும் எலக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய கதவுகளையும் கூடுதல் தேர்வாக வழங்க மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. வி-கிளாஸ் மற்றும் வி-கிளாஸ் மார்கோ போலோ கார்களில் வழக்கமான பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளே தொடரப்பட்டுள்ளன.

இ.க்யூ.வி என்ற மெர்சிடிஸ் வி-கிளாஸ் எம்பிவி காரின் எலக்ட்ரிக் வெர்சனிலும் வழக்கமான சிங்கிள் மோட்டார் செட்-அப் தான் தொடரப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 362 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியது. இந்த மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 343கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக மெர்சிடிஸ் வி-கிளாஸின் வெளிப்பக்க தோற்றம் அடுத்த லெவலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதை ஏற்கனவே கூறிவிட்டோம். குறிப்பாக, முன்பக்க கிரில் பகுதியில் ஒளிரக்கூடிய விளக்குகள் நாம் எதிர்பார்க்காத ஒன்று என்றே சொல்ல வேண்டும். அதேபோல், உட்பக்க டேஸ்போர்டும் மாடர்ன் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப வசதிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications









