1984க்கு பிறகு டொயோட்டா அறிமுகப்படுத்தி உள்ள கார்!! இடியே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது... நமக்கு கொடுத்து வைக்கல
புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 70 (Toyota Land Crusier 70) கார் ஜப்பான் நாட்டு மார்க்கெட்டில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 1980ஆம் காலக்கட்டங்களில் ஹெவி-ட்யூட்டி காராக ஜப்பானில் விற்பனையில் இருந்த இந்த டொயோட்டா கார் பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் புத்துணர்ச்சியான மாடர்ன் தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜப்பான் நாட்டில் இருந்து சில கார் நிறுவனங்கள் உலகளவில் பிரபலமாகி உள்ளன. அத்தகைய கார் நிறுவனங்களுள் ஒன்றுதான் டொயோட்டா ஆகும். இந்திய சந்தையில் கடந்த 25 வருடங்களாக தான் டொயோட்டா செயல்பட்டு வந்தாலும், தாயக நாடான ஜப்பானில் மிக நீண்ட வருட வரலாற்றை கொண்டது டொயோட்டா ஆகும்.

ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து 1980ஆம் காலக்கட்டங்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்களுள் ஒன்று லேண்ட் க்ரூஸர் 70 ஆகும். 1984இல் முதல்முறையாக வெளியீடு செய்யப்பட்ட இந்த கார் கமர்ஷியல் போக்குவரத்துக்கான ஹெவி-ட்யூட்டி வாகனமாகவே விற்பனை செய்யப்பட்டது. அதாவது, அதிக சுமைகளுடன் கரடு, முரடான பாதைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 2024ஆம் ஆண்டிற்காக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 70 கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.27 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2024 லேண்ட் க்ரூஸர் 70 காரின் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், காரின் ஒட்டுமொத்த தோற்றமும் மெருக்கேற்றப்பட்டு உள்ளதால், புதிய லேண்ட் க்ரூஸர் 70 காரில் ஹேண்ட்லிங் சிறப்பானதாக கிடைக்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

பொதுவாகவே, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார்களின் அடையாளமே அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அதிக ஆயுட்காலம் ஆகும். அவை அனைத்தும், இந்த புதிய லேண்ட் க்ரூஸர் 70 காரிலும் எந்தவொரு குறையுமின்றி உள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டு உள்ள 2.8 லிட்டர் 1ஜிடி-எஃப்.டி.வி டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட அளவில்-பெரிய எஸ்யூவி காரான லேண்ட் க்ரூஸர் 70 காரில் டீசல் டேங்க் சுமார் 130 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.

இந்த வாகனத்தின் மொத்த எடை 2,300 கிலோ ஆகும். ஆஃப்-ரோடுகளிலும் அதி செயல்திறனை வழங்கக்கூடியதாக உள்ள இந்த கார் இயங்கும்போது கூட பெரியதாக எந்தவொரு இரைச்சலும் ஏற்படாது என கூறும் டொயோட்டா, காரின் மைலேஜையும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. வலிமையான லேடார் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் இந்த காரில், வைகல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆக்டிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் டவுன் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், டொயோட்டா சேஃப்டி சென்ஸ் தொகுப்பையும் 2024 லேண்ட் க்ரூஸர் 70 கார் பெற்றுள்ளது. ஆட்டோ-கண்ட்ரோல் லைட்டிங் மற்றும் டிரைவ்-ஸ்டார்ட் கண்ட்ரோல் செயல்பாடுகளை இந்த சேஃப்டி சென்ஸ் தொகுப்பு மூலமாக பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படா விடினும், வெளிநாடுகளில் பல்வேறு தரமான தயாரிப்புகளை டொயோட்டா விற்பனை செய்துள்ளது/ இப்போதும் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, ஜப்பானில் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் வாகனங்களுக்கு தனி இரசிகர் பட்டாளமே உள்ளது. அவ்வாறு, 1980ஆம் காலக்கட்டத்தில் பலத்தரப்பு மக்களை ஈர்த்த லேண்ட் க்ரூஸர் 70 மீண்டும் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









