புது கார் வாங்குற பிளான் இருந்தா கொஞ்சம் நாளைக்கு ஓரம் கட்டி வைங்க.. ஜூலை மாசத்துல தரமான 3கார் அறிமுகமாகபோகுது
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில கார் மாடல்கள் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கின்றன. மாருதி சுஸுகியின் இன்விக்டோ தொடங்கி ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் வரை என பல கார்கள் ஜூலை மாதத்தில் அறிமுகமாக உள்ளன. இதுபோன்ற முக்கிய வரவாக பார்க்கப்படும் குறிப்பிட்ட சில கார் மாடல்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் பலதரப்பட்ட கார்கள் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதிரியான சூழலில் ஒரு சில கார்கள் கட்டாயம் அடுத்த மாதம் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அவற்றில் இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டும் வகையில் அமைந்திருக்கும் டாப் 3 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை தழுவிய மாடலாக உருவாகிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி இன்விக்டோ, மிக மிக மலிவு விலையில் டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கியா செல்டோஸ், இந்த கார் மாடல்களை பற்றிய சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி இன்விக்டோ: மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் ஓர் புதிய காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அது புதிய கார்தான் ஆனால் புதுமுக கார் அல்ல. டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலே இன்விக்டோ ஆகும்.

ஆகையால், புதிய பெயரில் வரும் இன்னோவா ஹைகிராஸாகவே இது பார்க்கப்படுகின்றது. ஆனால், ரீபேட்ஜ் செய்து, சில புதிய அம்சங்களை மாருதி சேர்த்து இருப்பதால் அது ஓர் புதிய தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த இன்விக்டோ எம்பிவி ரக காரை வெறும் ஹைபிரிட்-பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இ-சிவிடி டிரான்ஸ்மிஷன் வசதி உடன் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் மோட்டார் தேர்வே இன்விக்டோவில் எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 20 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் இன்விக்டோ விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூலை 5ஆம் தேதியே இந்த காரின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது.

ஹூண்டாய் எக்ஸ்டர்: இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவை அதகளப்படுத்தும் விதமாக இந்த கார் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது. குறிப்பாக, டாடா பஞ்ச் காருக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்த காரை ஹூண்டாய் வெகு விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனால்தான் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக டாடா பஞ்ச் இருக்கின்றது. இந்த காருக்கு போட்டியாக எக்ஸ்டர் வர இருப்பதால் பஞ்சைவிட குறைவான அல்லது அதற்கு நிகரான மலிவு விலையிலேயே இந்த காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் உற்பத்தி பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்த கார் 13 விதமான பெட்ரோல் வேரியண்டுகளிலும், கணிசமான எண்ணிக்கையில் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. விலை இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வருகை வரும் ஜூலை 10ஆம் தேதி அமைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. பார்க்க குட்டியான காராக எக்ஸ்டர் இருந்தாலும் அதில் சற்று பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் டேஷ்கேம் ஆகியவை இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, 4.2அங்குல டிஎஃப்டி எம்ஐடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் 10உள்நாட்டு மொழிகள் மற்றும் 2உலக மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் எக்ஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட கியா செல்டோஸ்: இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரபலமான எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடலே விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்தியாவில் கால் தடம் பதித்து நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடல் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் மாடலே இந்தியாவில் கியாவிற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தற்போகு செல்டோஸை கியா அப்டேட் செய்திருக்கின்றது. மேலும், அதன் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான முயற்சியிலும் கியா களமிறங்கி இருக்கின்றது. அப்டேட்டின்கீழ் கியா நிறுவனம் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இந்த காரில் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான அடாஸ்கூட வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதவிர டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல், ஹெட்ஸ்-அப் திரை, ஹீட்டான அனுபவம் தரும் இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், 360டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிரீமியம் போஸ் ஆடியோ சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய அம்சங்கள் கொண்ட கியா செல்டோஸே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் முக்கிய கார் மாடல்களாக மேலே பார்த்த 3ம் இருக்கின்றன. இவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக எக்ஸ்டர் மற்றும் இன்விக்டோவிற்கு எதிர்பார்த்திராத அளவிற்கு எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









