மாருதியின் ஆட்டத்தை தடுக்க, மஹிந்திரா பார்த்து, பார்த்து உருவாக்கும் புது வாகனம்!! யாருக்கும் தெரியாமல் சோதனை!
மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தின் 5-டோர் வெர்சன் மீண்டும் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், 5-டோர் தார் வாகனத்தை பற்றி நமக்கு தெரியவந்துள்ள புதிய விபரங்களை பற்றி இனி பார்க்கலாம்.
தார், மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட தார் 3 கதவுகளுடன் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதனால், வாகனத்தினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சற்று சிரமமாக உள்ளது. அதுமட்டுமின்றி, 3-டோர் தார் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற வாகனம் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதனால், 5 கதவுகளுடன் தார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி ஜிம்னி முந்திக் கொண்டது. ஜிம்னி 5 கதவுகளுடன் கிடைக்கிறது. மாருதிக்கு போட்டியாக மஹிந்திரா விரைவில் 5-கதவு தார் வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில், அறிமுகத்திற்கு முன்னதாக இந்த வாகனம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நிஜ உலகில், நம்ம ஊர் சாலைகளில் இயங்கும்போது எவ்வாறான சவால்களை இந்த வாகனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிய சிவப்பு நிற நம்பர் பிளேட் உடன் 5-கதவு தார் வாகனத்தை மஹிந்திரா தொடர்ச்சியாக பொது சாலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது.

வழக்கம்போல், இந்த சோதனை ஓட்டத்திலும் 5-கதவு தார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதனையும் தாண்டி புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் இந்த புதிய தார் வாகனத்தில் வழங்கப்பட உள்ளதை காண முடிகிறது. தற்போதைய தார் வாகனத்தில் உள்ளதை போல் இல்லாமல், இந்த சக்கரங்கள் மல்டி-ஸ்போக் அலாய் டிசைனில் உள்ளன.
இந்த சோதனை காரில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி ஹெட்லேம்ப்களும், வட்ட வடிவிலான எல்இடி டிஆர்எல்-களும் தான் அறிமுகம் செய்யப்படும் 5-டோர் தாரில் இருக்கும். இதற்குமுன் சமீபத்தில், இந்த தார் வாகனத்தின் உட்பக்க கேபினின் படங்கள் இணையத்தில் கிடைத்து இருந்தன. அவற்றின் மூலமாக, இதன் டேஸ்போர்ட் லே-அவுட் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடிந்தது.

அத்துடன், வாகனத்தின் பின் இருக்கை செட்-அப்பையும் அந்த படங்களில் காண முடிந்தது. தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் இருக்கை பயணிகளுக்கு செண்டர் ஆர்ம்ரெஸ்ட், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்பெல்ட்கள் மற்றும் பின்பக்க ஏசி வெண்ட்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன.
இவை தவிர்த்து, 5-டோர் மஹிந்திரா தாரில் வேறு என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு முழுமையாக தெரியவில்லை. தற்போதைய 3-டோர் தாரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய தார் வாகனத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனத்தின் தயாரிப்புக்கு போட்டியாக விளங்க வேண்டுமெனில், அதற்கு இணையாக வாகனத்தை உருவாக்க வேண்டும். நம் மஹிந்திரா நிறுவனத்தையும் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. நிச்சயமாக அது உருவாக்கும் 5-டோர் தார் தரமானதாகவே இருக்கும். இந்த சோதனை படங்களின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது, அதாவது 5-டோர் தார் வாகனத்தை மஹிந்திரா நன்கு பெரியதாக உருவாக்குகிறது.


Click it and Unblock the Notifications









