எத்தனை கார்கள் சந்தையில் காணாமல் போக போகுதோ... மஹிந்திராவின் அடுத்த புதிய கார்கள் ஒவ்வொன்றும் தீயாய் இருக்கு!!
இந்தியாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் என்று சொன்னால் நம்மில் பெரும்பாலானோரின் ஞாபகத்தில் சட்டென உதிப்பது டாடா மோட்டார்ஸ் ஆகவே இருக்கும். ஆனால் மஹிந்திரா & மஹிந்திரா குழுமமும் இந்தியாவை சேர்ந்ததுதான். மேலும், கார்களின் தரத்திலும், பாதுகாப்பிலும் டாடா மோட்டார்ஸுக்கு எந்த விதத்திலும் மஹிந்திரா சளித்தது கிடையாது.
மஹிந்திரா உருவாக்கிய எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி கார் உள்பட சில கார்கள் க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளன. இத்தகைய உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்து பல்வேறு புதிய கார்கள் வரும் காலங்களில் அறிமுகமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் வலுவாக கால்பதிக்கும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது.

இதில் முதல் முயற்சியாக சமீபத்தில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். கடந்த சில வருடங்களில் மஹிந்திரா பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்ட மற்ற தயாரிப்புகளான தார், எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ-என் உள்ளிட்டவையும் சந்தையில் நல்ல கவனத்தை பெற்றுள்ளன. இவற்றை தொடர்ந்து மஹிந்திரா பிராண்டில் இருந்து அடுத்ததாக என்னென்ன புதிய கார் அறிமுகமாகவுள்ளன என்பதை இனி பார்க்கலாம்.
1. பொலேரோ நியோ ப்ளஸ்
விற்பனையில் பெரியதாக சோபிக்காமல் போன டியூவி300 காரின் புதிய அப்டேட் வெர்சனாக சில வருடங்களுக்கு முன்பு பொலேரோ நியோ காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இதன் புதிய 9-இருக்கை வெர்சனாக பொலேரோ நியோ ப்ளஸ் காரை களமிறக்கும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது. இந்த காரில் முன் வரிசையில் 2 இருக்கைகளும், மத்திய வரிசையில் 3 மேசை இருக்கைகளும், பின்பக்கத்தில் எதிரெதிராக தலா 2 இருக்கைகள் என மொத்தம் 9 இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.
2. தார் 5-கதவு
மஹிந்திராவின் பிரபலமான வாகனங்களுள் தார் ஆஃப்-ரோடு எஸ்யூவியும் ஒன்று. தார் வாகனத்தில் உள்ள ஒரே குறை என்னவென்றால், உட்புறத்தில் குறைவான இருக்கை எண்ணிக்கைகள் ஆகும். வாகனத்தை முடிந்தவரையில் பெரியதுப்படுத்தாமல் 2ஆம் தலைமுறை தாரை கடந்த 2020இன் இறுதியில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சற்று விசாலமான கேபின் உடன் குடும்பமாக பயணிப்பதற்கு ஏற்ற 5-கதவு தார் வாகனம் தயாராகி வருகிறது.
3. புதிய தலைமுறை பொலேரோ
ஒவ்வொரு மாதத்திலும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படும் பயணிகள் கார், பொலேரோ ஆகும். இருப்பினும் இந்த காரை மஹிந்திரா அப்டேட் செய்து பல வருடங்களாகி விட்டது. அப்டேட்கள் மூலமாக புதிய பொலேரோவின் வெளிப்பக்க மற்றும் உட்புற தோற்றத்தை முற்றிலும் புத்துணர்ச்சியானதாக வழங்க மஹிந்திரா முயற்சிக்கும். இந்த காரின் அறிமுகத்தை அடுத்த 2024இல் எதிர்பார்க்கிறோம்.
4. புதிய எக்ஸ்யூவி500
இந்தியாவில் எக்ஸ்யூவி500 காரை நிறுத்திவிட்டுத்தான் எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. எக்ஸ்யூவி700 காருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதுதான் என்றாலும், எக்ஸ்யூவி500 என்ற பெயரை வீணாக்க மஹிந்திரா விரும்பாது. அதுமட்டுமின்றி, எக்ஸ்யூவி700 கார் எக்ஸ்யூவி500-ஐ காட்டிலும் அளவில் பெரியது & நீளமானது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்றவற்றிற்கு போட்டியாக ஒரு காரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எலக்ட்ரிக்
தற்போதைக்கு மஹிந்திரா விற்பனை செய்வதிலேயே விலை உயர்ந்த காராக விளங்கும் எக்ஸ்யூவி700 கார் 2024 முடிவதற்குள் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. இருப்பினும், இதன் அறிமுகம் 2025க்கு தாமதமாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. மஹிந்திரா ஏற்கனவே வெளியீடு செய்துவிட்ட எக்ஸ்யூவி இ8 கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








