குடும்பமாக பயணிக்க 7-இருக்கை காரை வாங்க பிளான் போட்டு வருகிறீர்களா? மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்!
அளவில் சிறியதான, குறைந்த விலையிலான கார்களுக்கு ஒரு பக்கம் தேவை இருந்துவரும் சூழலில் மறுப்பக்கம், குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றவாறு அதிக இருக்கைகளுடன் நீளமாக வடிவமைக்கப்படும் கார்களுக்கும் தேவை உள்ளது. இத்தகைய கார்கள் பெரும்பாலும் 6 அல்லது 7 இருக்கைகளுடன் கிடைக்கக்கூடியவையாக இருக்கும்.
அதிக இருக்கைகள் இல்லாவிடினும் பரவாயில்லை, ஆனால் கேப்டன் இருக்கை வேண்டுமென கேட்பவர்கள் இத்தகைய கார்களை 6 இருக்கைகள் உடன் பெறுவர். அதுவே முடிந்த அளவிற்கு அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல விரும்புவோர் 7-இருக்கை வெர்சனின் பக்கம் செல்வர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 6 இருக்கைகளை விட 7 இருக்கைகளுடன் இத்தகைய கார்களை வாங்குவோரே அதிகம்.

இந்தியாவில் இவ்வாறு 6/ 7 இருக்கைகளுடன் குறைந்த விலையில் தற்போதைக்கு 5 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஐந்தில் சில மாடல்கள் 7 இருக்கை தேர்வில் மட்டுமே கிடைக்கின்றன. மஹிந்திரா பொலேரோ, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி எர்டிகா, கியா கேரன்ஸ், டொயோட்டா இன்னோவா என்பவை அந்த 5 கார்களாகும்.
நடப்பு 2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி - ஜூன்) மேற்கூறப்பட்ட 5 கார்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்டதாக முதலிடத்தில் மஹிந்திரா பொலேரோ உள்ளது. 2023 ஜனவரி-ஜூன், இந்த 6 மாதங்களில் சுமார் 53,812 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதுவே கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 45,994 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பொலேரோ கார்களின் விற்பனை ஆனது 17% அதிகரித்துள்ளது.

பொலேரோவுக்கு அடுத்து, 2வது இடத்திலும் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ உள்ளது. ஸ்கார்பியோ காரின் மார்க்கெட்டை கடந்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து மஹிந்திரா நிறுவனம் மிகவும் வலுப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு விற்பனையில் இருந்த ஸ்கார்பியோ கார்கள் தற்சமயம் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ என் என இரண்டாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாகவே, 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெறும் 22,888 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பு 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 127% அதிகமாக 52,036 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை ஆனது கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் வரையில் 49,732 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் எர்டிகா கார்கள் 6 மாதங்களில் என்பது சிறப்பான விற்பனை எண்ணிக்கை தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டின் இதே முதல் 6 மாதங்களில் சுமார் 68,922 எர்டிகா கார்கள் விற்கப்பட்டு இருந்தன. அதாவது, அந்த சமயத்தில் 6 (அ) 7 இருக்கைகளுடன் கார் வாங்க நினைப்போரின் சாய்ஸ் எர்டிகாவாகவே இருந்தது.
4வது மற்றும் கடைசி 5வது இடங்களில் கியா கேரன்ஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த 6 மாத கால விற்பனை எண்ணிக்கைகள் முறையே 40,771 மற்றும் 34,647 ஆகும். ஆனால் 2022இன் முதல் 6 மாதங்களில் இவை இரண்டும் ஏறக்குறைய 30 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகி எர்டிகாவை மஹிந்திரா நிறுவனம் தனது கார்கள் மூலம் முந்தியுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோவை போல், டொயோட்டா நிறுவனமும் இன்னோவாவின் மார்க்கெட்டை இந்தியாவில் பலப்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை விட இன்னோவா கார்களின் விற்பனை வெறும் 4 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









