நாகார்ஜுனாவும் இந்த காரை வாங்கிட்டாரா!.. இந்த காரோட ஸ்பெஷல்கள் என்னனு தெரிஞ்சா நீங்களே வாங்க ஆசப்படுவீங்க!
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மின்சார கார் பயன்பாட்டிற்கு மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் எந்த நிறுவனத்தின் மின்சார காரை வாங்கி இருக்கின்றார்?, அந்த காரின் விலை என்ன?, சிறப்புகள் என்ன?, என்பது போன்ற அனைத்து முக்கிய தகவல்களையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் நாகார்ஜுனாவும் ஒருவர் ஆவார். இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருடைய நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய 'இதயத்தை திருடாதே' படத்திற்கு இப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இத்தகைய தரமான படமே அது.

இதுபோன்று தமிழில் பல வெற்றி படங்களை நாகார்ஜுனா தந்திருக்கின்றார். இத்தகைய பெரும் நட்சத்திர நடிகரே தற்போது எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஓர் புதிய எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார். கியா நிறுவனத்தின் மின்சார கார் மாடலான இவி6-ஐயே அவர் வாங்கி இருக்கின்றார்.
இதுவே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிய முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இப்போது வரை இந்த ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே இந்திய சந்தையில் கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரையே நடிகர் நாகர்ஜூனா வாங்கி இருக்கின்றார். இதை கியா கார் விற்பனையாளரும் உறுதி செய்திருக்கின்றார்.

மேலும், இதற்கு சான்றாக காரை அவருக்கு டெலிவரி வழங்கும் புகைப்படத்தை டீலர்ஷிப் நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது. கார் கியா 36 ஜுபிலி ஹில்ஸ் மற்றும் கச்சிபவுலி-யே இந்த படங்களை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றன. நாகர்ஜூனா மற்றும் முன்னாள் நடிகையும், அவரது மனைவியுமான அமலா ஆகியோர் காரை டெலிவரி பெறுவது போன்ற படங்களே வெளியிடப்பட்டு இருக்கின்றன.
கியா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்திய பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எம்எஸ் தோனி, மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிகவும் கவர்ச்சியான, அதேசமயத்தில், அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட மின்சார காராக கியா இவி6 காட்சியளிக்கின்றது. இந்த காரை கியா நிறுவனம் சிபியூ வாயிலாகவே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 60.95 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஓர் முழு சார்ஜில் 528 கிமீ தூரம் வரை இந்த காரால் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 77.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியை அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதைப் பயன்படுத்தி வெறும் 4.5 நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்யும்பட்சத்தில் 100 கிமீ தூரம் வரை டிராவல் செய்துக்கொள்ள முடியும். இதேபோல் 350 kW ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட்டிலும் வைத்து கியா இவி6 எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்போது 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்தை வெறும் 18 நிமிடங்களில் எட்டிவிடும். மேலும், 50 kW சார்ஜரிலும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் பயன்படுத்தும்போது 73 நிமிடங்கள் வரை முழுமையாக சார்ஜாக அது நேரம் எடுத்துக் கொள்ளும்.
லக்சூரி மற்றும் தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த கார் நம்மை மிரள வைக்கும் வகையில் உள்ளது. பொதுவாக கார்களில் மிருக தோல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இந்த காரில் சுத்த சைவ லெதர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்டயரிங் வீல் மற்றும் இருக்கை என பலவற்றில் சைவ லெதர பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 64 வண்ணங்கள் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வெண்டிலேட் இருக்கைகள், கண்களை கூசாத பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் மற்றும் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாகார்ஜுனா எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு மாறி இருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. மேலும், இவரை பின்பற்றி அவரது ரசிகர்கள் சிலரும் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இ-வாகன பயன்பாட்டால் காற்று மாசுபாடு அளவு கணிசமாக குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் விதமாகவே நாகர்ஜூனா கியா இவி6 கார் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









