ஹூண்டாய் கார்கள் கையில் இருந்தா எமனையே சீண்டி சண்டை இழுக்கலாம் போலிருக்கே! விஐபி-போன்ற பாதுகாப்பு இனி நிச்சயம்
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாய் (Hyundai)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தன்னுடைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, தன்னுடைய தயாரிப்புகளை கூடுதல் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. அதாவது, நிறுவனம் தன்னுடைய அனைத்து தயாரிப்புகளிலும் குறிப்பிட்ட சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
அதில் முதல் இடத்தை ஆறு ஏர் பேக்குகள் இடம் பிடித்திருக்கின்றன. விபத்தின்போது பாதுகாப்பை வழங்கும் விஷயத்தில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதனால், இந்திய அரசும் இந்த அம்சத்தை அனைத்து கார்களிலும் கட்டாயப்படுத்தி இருக்கின்றது. ஆனால், இந்த அம்சத்தையோ வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களில் இரண்டை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதுவும், முன் பக்க பயணி மற்றும் ஓட்டுநர் ஆகியோரை மையப்படுத்தி மட்டுமே அவை வழங்கப்படுகின்றன. ஒன்று ஸ்டியரிங் வீலிலும், மற்றொன்று முன் பக்க பயணியை பாதுகாக்கும் விதமாகல டேஷ்போர்டிலும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே பின் பக்க பயணிகளுக்கும் பாதுகாப்பை வழங்கும் விதமாக பின்னிருக்கையாளர்கள் மற்றும் பக்கவாட்டு பகுதி என அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆறு ஏர் பேக்குகளை தன்னுடைய அனைத்து தயாரிப்புகளிலும் பாராபட்சமின்றி வழங்க இருப்பதாக ஹூண்டாய் தற்போது அறிவித்து இருக்கின்றது.
இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் பாரத் என்சிஏபி-யின் வருகையும் ஓர் காரணமாக இருக்கின்றது. இந்தியாவிற்கான பாதுகாப்பான காரை இந்தியாவிலேயே வைத்து ஆய்வு செய்யும் விதமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதே பாரத் என்சிஏபி ஆகும். முன்னதாக இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்களை குளோபல் என்சிஏபி-யே ஆய்விற்கு உட்படுத்தி வந்தது.

இந்த நிலையிலேயே உலக நாடுகளை நம்பி இருப்பதை கை விட செய்யும் விதமாக உள் நாட்டிலேயே கார்களின் பாதுகாப்பு திறனை ஆய்வும் செய்யும் பாரத் என்சிஏபி-யை அறிமுகம் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதுவே தன்னுடைய அனைத்து கார்களையும் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் ஹூண்டாயை தள்ளி இருக்கின்றது.
சமீபத்தில், இந்த நிறுவனத்தின் புதிய வெர்னா கார் குளோபல் என்சிஏபி வாயிலாக மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் அக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று அனைவரையும் அசத்தியது. இந்த தகவல் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே தன்னுடைய மற்ற தயாரிப்புகளையும் பாதுகாப்பானதாக மாற்றி இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 13 விதமான கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஐ10 நியாஸ், ஐ20, ஐ20 என் லைன், அவ்ரா, வெர்னா, எக்ஸ்டர், வென்யூ, வென்யூ என் லைன், கிரெட்டா, அல்கஸார், டக்சன், கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 இவி ஆகிய கார் மாடல்களையே ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் மாடல்களின் உயர் நிலை, ஆரம்ப நிலை என எந்தவொரு பாராட்பசமும் இன்றி அனைத்திலும் இனி 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட இருக்கின்றது. நிறுவனம் முன்னதாக அதன் கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் அவுரா ஆகிய கார் மாடல்களில் 4 ஏர் பேக்குகளை ஸ்டாண்டர்டாக்கியது.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் இதே ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய கார் மாடல்களில் ஆறு ஏர் பேக்குகளை கட்டாயமாக்கியது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய கார் மாடல்களான வெர்னா மற்றும் எக்ஸ்டர் ஆகிய கார் மாடல்களிலும் ஆறு ஏர் பேக்குகளை ஹூண்டாய் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, தன்னுடைய உயர்நிலை தேர்வுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கும் விதமாக ஹூண்டாய் அடாஸ் எனும் மிக சிறந்த தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், டாடாவின் தயாரிப்புகளைப் போலவே அதிக பாதுகாப்பானது என்கிற மகுடத்தை இனி வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளும் சூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய லேட்டஸ்ட் தயாரிப்புகள் சிலவற்றை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாரத் என்சிஏபி-யிடம் ஒப்படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது அந்த கார்களின் உறுதித் தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு திறன்குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கின்றது. ஒட்டுமொத்த மூன்று கார்களை அது பிஎன்சிஏபி இடம் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அவை என்னென்ன மாடல்கள் என்கிற விபரம் அறிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கார்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனமும் அதன் சார்பில் அனைத்து கார் மாடல்களிலும் ஆறு ஏர் பேக்குகளை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இதனால், அந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications