7 பென்ஸ் ஜி63, 3 ரேஞ்ஜ் ரோவர்னு 30 கோடி ரூபா கார்களுடன் சாலையில் வலம் வரும் இந்தியர்.. யாருங்கையா அவரு?
ஒரு இந்தியரோட பாதுகாப்பிற்காக 7 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes-Benz AMG G 63) கார்களும், 3 ரேஞ்ஜ் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) கார்களும் பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. யார் அந்த இந்தியர்?, அவரின் இந்த கான்வாயில் மட்டும் பயன்படுத்தப்பட்ட கார்களின் மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
நாட்டின் பிரதமருடைய கான்வாயையே மிஞ்சும் வகையில் அதிக பாதுகாப்பு படையினர் சூழ சில தொழிலதிபர்கள் நாட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அரசே சில தொழிலதிபர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அரசின் இசட் பிளஸ் பிரிவின் பாதுகாப்பு உடன் நாட்டை வலம் வந்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவரே முகேஷ் அம்பானி.

பல ஆண்டுகளாக மாநில முதல்வர்களுக்கு இணையான பாதுகாப்பு உடன் இவர் நாட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரின் பாதுகாப்பு வாகனங்களின் அணி வகுப்பில் மிக மிக விலையுயர்ந்த லக்சூரி கார்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமின்றி தன்னுடைய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கான பயன்பாட்டிற்கும் அவர் சொகுசு கார்களையே களமிறக்கி இருக்கின்றார்.
தன்னுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டே இவ்வாறு அவர் செய்திருக்கின்றார். அதேவேளையில், தன்னுடைய கான்வாயில் உள்ள கார்களை அவர் அவ்வப்போது அப்கிரேடும் செய்வதுண்டு. முன்பைக் காட்டிலும் இப்போது மிக மிக நவீன ரக கார்கள் அவரது கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய நாட்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இப்போது மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி கார்களாக அவை மாற்றப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்னதாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் உள்ளிட்ட வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிதாக 7 பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி கார்களும், மூன்று லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் வோக் எஸ்யூவி கார்களும் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு மட்டும் ரூ. 30 கோடிகள் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காரும் பல கோடி ரூபாய் விலைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி கார் மாடலின் ஒற்றை யூனிட்டின் விலை மட்டும் ரூ. 3 கோடிகள் ஆகும்.

இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே தன்னுடைய கான்வாய்க்காக 7 யூனிட்டுகளை பயன்படுத்தி வருகின்றார், முகேஷ் அம்பானி. இந்த ஏழின் மதிப்பு ரூ. 21 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அதிக லக்சூரி மற்றும் திறன் வெளிப்பாட்டிற்கு பெயர்போன கார் மாடலே இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆகும்.
இந்தியாவில் திரை பிரபலங்கள் சிலர் இந்த காரை தங்களின் தனிப்பட்ட சொகுசு வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய வாகனத்தையே பாதுகாப்பு பணிகளுக்காக இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் 4.0 லிட்டர் பை-டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது மணிக்கு 220 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, வெறும் 4.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவே இந்த சொகுசு கார் இருக்கின்றது.
இந்த காரை போலவே அதிக சொகுசு மற்றும் திறனை வெளியேற்றக் கூடியதாகவே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் மாடலும் இருக்கின்றது. இந்த மாடல் ஒட்டுமொத்தமாக 3 யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.5 கோடிகள் ஆகும். இதில் ஆடம்பர வசதிகள் மிக மிக அதிகம் என்பதால் இத்தகைய அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானியிடம் இந்த கார் மட்டுமில்லைங்க இன்னும் பல சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பென்ட்லீ பென்டேகா, ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் ட்ராப்ஹெட் கூபே, போர்ஷே கேயென்னே, பென்ட்லீ முஸ்லேன், மெர்சிடிஸ் எஸ்600 குவார்ட், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எச் செக்யூரிட்டி உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பாதுகாப்பு விஷயத்தில் சமரசமில்லாதவராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இதன் விளைவாகவே அவர் அவ்வப்போது தன்னுடைய கான்வாயில் உள்ள கார்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார். அதேவேளையில், இவரது குடும்பத்தினர் மிகப் பெரிய வாகன காதலர்களாக இருக்கின்றனர். இதன் காரணத்தினாலேயே உலகின் மிகவும் அரிய வகை வாகனங்கள் அவரது இல்லத்தில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
