பேருந்தின் பதிவெண்ணை டெஸ்லா காருக்காக வாங்கிய அமெரிக்கா வாழ் இந்தியர்.. இந்த ஸ்டோரிய வச்சு படமே எடுக்கலாம்!
புதிதாக வாங்கப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர், அவர் சிறு வயதில் பள்ளிக் செல்ல பயணித்த பேருந்தின் பதிவெண்ணை பயன்படுத்தி இருப்பது ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த விநோத சம்பவம் குறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் கே. தனபால். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சமீபத்திலேயே இவரது பணிகாலம் முடிந்து ஓய்வு பெற்றார். இந்த நாளை தனது குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து வெகு விமரிசையாக அவர் கொண்டாடினார்.

அப்போது அவரது குடும்பத்தினர் சிலர் அவருக்கே தெரியாமல் தயார் செய்து வைத்திருந்த ஆச்சரியப் பரிசுகளை தனபாலுக்கு வழங்கினர். அந்தவகையில் அவருக்கு ஓர் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றும் போட்டுக் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கே. தனபாலுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதை பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அனைத்தும் நான்றாக போயிக் கொண்டிருந்த நிலையில், ஒற்றை க்ளிப் அவரின் கண்ணீரை வரவழைத்துவிட்டதாக் கூறப்படுகின்றது. ஓர் நபர் அவர் வாங்கியிருக்கும் புத்தம் புது காரையே அந்த க்ளிப்பில் காண்பித்திருந்தார். அந்த கார் ஓய்வு பெற்ற ஓட்டுநரின் அழுகைக்கு காரணமல்ல.

அதில், இடம் பெற்றிருந்த பதிவெண்ணே தனபாலின் கண்ணீருக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. அந்த பதிவெண் கொண்ட பேருந்தையே 90-ஸ்களில் தனபால் ஓட்டி வந்திருக்கின்றார். பெங்களூருவின் வித்யாரன்யபுரா மற்றும் யஷ்வந்தபுரா ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் இயங்கி வந்த பேருந்தே அது ஆகும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்தில் அந்த பேருந்து முக்கிய பங்கினை ஆற்றியது. இதுமட்டுமில்லைங்க, உண்மையில் பலருடைய வாழ்க்கையில் அந்த பேருந்து ஓர் அங்கமாகவே மாறி இருந்தது. அந்தவகையில், தன்னுடைய வாழ்க்கையிலும் இந்த பேருந்து ஓர் அங்கமாக இருந்ததாகக் கூறியே தன்னுடைய புத்தம் புதிய காருக்கு பேருந்தின் பதிவெண்ணான கேஏ01 எஃப் 232 எனும் எண்களை இளைஞர் பயன்படுத்தி இருக்கின்றார்.

அந்த நபரின் பெயர் செங்கப்பா என கூறப்படுகின்றது. இவர் தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வருகின்றார். சமீபத்திலேயே டெஸ்லா காரை அவர் வங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றிய பேருந்தின் பதிவெண்களை செங்கப்பா அவருடைய காரில் பயன்படுத்தி இருக்கின்றார்.
இந்த நெகிழ்ச்சியான செயலைப் பார்த்தே முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநர் தனபால் ஆனந்த கண்ணீர் விட்டிருக்கின்றார். மேலும், தன்னுடைய 90ஸ் கால நினைவுகளையும் சமூக வலைதள பக்கம் வாயிலாக தனபால் பகிர்ந்திருக்கின்றார். "1992இல் பிஎம்டிசி யூனிட் 11ல் நான் ஓட்டுநராக பணியாற்றியபோது எனது 401பி பேருந்தில் பள்ளி சிறுவர்கள் அதிகம் பயணிப்பர்.
செங்கப்பா, ஆதித்யா இந்த இரு சிறுவர்களே எனக்கு அதிகம் பரீட்சையம் ஆனவர்கள். இவர்கள் இருவரும் என்னுடைய பேருந்தின் பானெட்டில் அமர்ந்தே தினமும் பள்ளிக்கு செல்வர். இவர்கள் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்" என அந்த பதிவில் கூறி இருக்கின்றார். இந்தியாவில் வாகனங்களுக்கான பதிவெண் ரேண்டமாக மட்டுமே வழங்கப்படும்.
தேவையான பதிவெண்ணை தேர்வு செய்ய வேண்டும் எனில் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் பதிவெண் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனாலேயே டெஸ்லா கார் உரிமையாளரான செங்கப்பாவால் தேவைக்கேற்ப பதிவெண்ணை வாங்க முடிந்திருக்கின்றது. இதற்கு அவர் கணிசமான அளவு தொகையை கூடுதலாக வழங்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஓர் விநோத நிகழ்வாகும். இதற்கு முன்னதாக இதுபோன்று ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்குமா என்றுகூட யூகிக்க முடியவில்லை. ஆகையால், இந்த சம்பவம் பலரின் மனத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பேருந்து மற்றும் அதன் ஓட்டுநருடன் இந்த அளவிற்கு பந்தமா என்கிற கேள்வியே அநேகரிடத்தில் எழும்பி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
