செகண்ட் ஹேண்ட்ல காரை வாங்கியவர்களே உஷார்! பழைய ஓனரால இப்பவும் காரை கன்ட்ரோல் செய்ய முடியுமாம்!
நீங்க விலை குறைவா இருக்கு என்பதற்காக செகண்ட் ஹேண்டில் காரை வாங்கி பயன்படுத்துபவரா?, உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓர் ரிப்போர்ட்டை வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா மட்டும் இல்லைங்க உலகளவில் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விலை குறைவாக, விரும்பிய கார் மாடலை வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் பலர் தங்களுக்கான வாகனங்களை யூஸ்டு மார்கெட்டில் (செகண்ட் ஹேண்ட் சந்தையில்) தேர்வு செய்கின்றனர். இங்கு வாகனங்களை வாங்குவதனால் நல்ல லாபம் கிடைக்கும். அதேவேளையில், சில ரிஸ்க்கு (அபாயங்)-களும் உள்ளன. நாம் பல வழிகளில் ஏமாற்றப்படலாம்.

ஏமாத்திடுவாங்க
பார்க்க பலபலவென இருக்கும் வாகனங்கள், உள்ளுக்குள் பல்வேறு பாதிப்பைக் கொண்டிருக்கலாம். இவை வாங்கிய சில நாட்களிலேயே நமக்கு பெரிய செலவை ஏற்படுத்தக் கூடும். இதுமட்டும் இல்லைங்க இன்னும் சில ரிஸ்க்குகளும் செகண்ட் ஹேண்ட் வாகனங்களில் இருப்பதாக வாகனத்துறை வல்லுநர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே, பழைய ஓனரால் காரை விற்ற பின்னரும் அந்த காரில் உள்ள சில முக்கிய பாகங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
எது சூப்பர் நினைச்சோமோ அதுதான் ஆப்பு வைக்குது!
வாகன பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களில் அதி நவீன வசதிகளை வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில், அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் அம்சமாக கார் இணைப்பு அம்சம் இருக்கின்றது. இணையத்தின் வாயிலாக செயல்படும் இந்த சேவையை செல்போன் செயலி வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால், இதற்கு செல்போன் மிக முக்கிய தேவையாக உள்ளது.

இவை இருந்தால் போதும், இதனைக் கொண்டு காரை இணைக்கும்பட்சத்தில் எந்த மூலையில் இருந்தும் அந்த காரைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, ஏசியை ஆன் செய்தல் - ஆஃப் செய்தல், கதவுகளை லாக் செய்தல் - அன்லாக் செய்தல் மற்றும் எஞ்ஜினை ஆஃப் செய்தல் மற்றும் ஆன் - செய்தல் போன்றவற்றையும் செய்ய முடியும். இதுபோன்று எக்கசக்க செயல்களை கார் இணைப்பு வாயிலாக செய்து கொள்ள முடியும்.
இது இன்றைய கால கார் உரிமையாளர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம் ஆகும். ஆனால், இந்த அம்சமே தற்போது பலருக்கு தலை வலியாக மாறி உள்ளது. ஆமாங்க, ஏற்கனவே இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதியைக் கொண்டிருந்த பழைய ஓனர்களால் காரை விற்பனைச் செய்த பின்னரும் அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இதை ஆராய்ச்சி தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. டெஸ்லா போன்ற நவீன கால கார்களை தயாரித்து வரும் வாகன உற்பத்தியாளர்கள் செல்போனையே காரின் சாவியாக பயன்படுத்தும் வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருத்தர் நிரூபிச்சு காட்டியிருக்காரு
இதுபோன்ற நவீன அம்சங்களே பழைய உரிமையாளர்கள் தொடர்ச்சியாக காரை கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. இதை 2017 கடில்லாக் எஸ்கலேட் காரை பயன்படுத்தி வந்த ஓர் நபரும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அவர் கன்னெக்ட் ஆப் வாயிலாக தன்னுடைய விற்கப்பட்ட கடிலாக் காரை இப்போதும் நோட்டமிட முடிவதாக தெரிவித்துள்ளார். காரின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிதல், ஆன்-ஆஃப் செய்வதற்கான வாய்ப்பை இப்போதும் 'மை கடில்லாக்' செயலி வழங்குவதாக கூறியுள்ளார்.
இந்த தகவல் செகண்ட் ஹேண்ட் கார் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக அமையலாம் என அஞ்சப்படுகின்றது. காரை விற்பது போல் விற்றுவிட்டு பின்னர் அவர்களே காரை திருடி பின்னர் மீண்டும் மற்றொருவருக்கு விற்க இந்த வசதி துணையாக அமையும் என்கிற காரணத்தினாலேயே அஞ்சப்படுகின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் கார் உற்பத்தியாளர்கள் உடனடியாக களமிறங்கி இருக்கும் பிரச்னைகள் சரி கட்ட வேண்டும் என வாகன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இதை செய்தால் தவிர்க்கலாம்
ஒருவேளை நீங்கள் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் காரில் இணைப்பு வசதியை ஓர் ரீசெட் செய்துவிடுங்கள். குறிப்பாக, முன்னாடி காரை பயன்படுத்தி வந்தவர்களின் அனைத்து விபரங்களையும் சிஸ்டத்தில் இருந்து அகற்றுவதே சிறந்தது. மேலும், உங்கள் காரின் பழைய ஓனர் அவருடைய செல்போனில் இருந்து காரின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டாரா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதை உங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்றால், கார் டீலர்ஷிப்பிடம் அணுகி இதை சரி செய்வதற்கான கோரிக்கையை முன் வைக்கலாம். இதன் வாயிலாக பாதுகாப்பு சிக்கல்கள் களைக்கப்படும்.


Click it and Unblock the Notifications








