பல்க் ஆர்டர்! பஸ்களை வாங்கி குவிக்க போகும் தமிழக அரசு! அந்த ஒரு கம்பெனிகிட்ட இருந்து இவ்ளோ பஸ்கள் வர போகுதா!
இந்தியாவை சேர்ந்த பிரபலமான வாகன நிறுவனங்களில் ஒன்று அசோக் லேலண்ட் (Ashok Leyland). தமிழக தலைநகர் சென்னையில்தான், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் மீது தமிழ்நாடு அரசுக்கு (Tamil Nadu Government) எப்போதுமே தனி பாசம் இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால், அதிகம் விரும்பப்படும் நிறுவனம் எது என்று கேட்டால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அசோக் லேலண்ட் என்று சொல்லலாம். ஆம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்திற்கும் அதிகமான அசோக் லேலண்ட் பஸ்களை இயக்கி வருகின்றன.

அதாவது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களிடம் உள்ள மொத்த பஸ்களில், 90 சதவீத பஸ்கள் அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியவைதான். இந்த சூழலில் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தமிழக அரசு தற்போது மீண்டும் ஒரு முறை மிகப்பெரிய ஆர்டர் (Order) ஒன்றை வழங்கியுள்ளது.
இது 1,666 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டர் ஆகும். இந்த ஆர்டரின் மதிப்பு 371.16 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு பல்வேறு போக்குவரத்து கழகங்களுக்காக இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படும்.

இந்த ஆர்டரை வென்றதில் மகிழ்ச்சி என அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசிடம் இருந்து மிகப்பெரிய பஸ் ஆர்டரை வென்றதையடுத்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் (Shares) உயர தொடங்கியுள்ளன. இங்கே குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது.
கடந்த ஒரு சில வார அளவில் அசோக் லேலண்ட் நிறுவனம் வென்றுள்ள 2வது மிகப்பெரிய ஆர்டம் இது என்பதுதான் அது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில், குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்திடம் இருந்து, அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்று வந்திருந்தது.
அது 1,282 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டர் ஆகும். அந்த ஆர்டர் கிடைத்தபோதும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. தற்போது தமிழ்நாடு அரசிடம் இருந்து, அதை விட அதிக பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் வென்றுள்ளது. எனவே இம்முறையும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர தொடங்கியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகப்பெரிய ஆர்டரை வென்றுள்ளதால், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில், வரும் காலங்களில் இன்னும் நிறைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பஸ்களை நம்மால் பார்க்க முடியும். அசோக் லேலண்ட் நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதால், இது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








