100% பெண் தொழிலாளர்கள் மட்டுமே... அசோக் லேலண்டின் அசத்தலான மூவ் - ஓசூர் தொழிற்சாலையில்!!
நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் பெண்களை போற்றும் விதமாக அசத்தலான ஓர் காரியத்தை துவங்கியுள்ளது. அது என்ன என்பதை பற்றியும், அசோக் லேலண்டின் அடுத்த திட்டங்கள் பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டீர்கள் என நினைக்கிறேன். இந்துஜா குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னைக்கு அருகே எண்ணூர் பகுதியில் அசோக் லேலண்டிற்கு தொழிற்சாலை உள்ளது. அத்துடன் அசோக் லேலண்டிற்கு ஓசூரிலும் தொழிற்சாலை உள்ளது.

இந்த ஓசூர் தொழிற்சாலையில் தான் 80 பெண் தொழிலாளர்கள் உடன் 100% பெண்களால் இயங்கும் பிரோடக்ஷன் லைனை அசோக் லேலண்ட் துவங்கியுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உற்பத்தி தொழிற்துறைக்கு பெண்களை அழைத்து வருதல் என்கிற 2 நோக்கங்களின்படி இந்த நடவடிக்கையை மகளிர் தின வாரத்தில் அசோக் லேலண்ட் மேற்கொண்டு இருக்கிறது. அதேநேரம் நிறுவனத்தின் வாகன உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்பதும் அசோக் லேலண்டின் திட்டமாகும்.
இந்த வகையில் அசோக் லேலண்டின் ஓசூர் தொழிற்சாலையில் புதிய என்ஜின் லைனில் பணியமர்த்தப்பட்டுள்ள 80 பெண் தொழிலாளர்கள் ஆலையில் தயாரிக்கப்படும் கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜின்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக இந்த பெண் தொழிலாளர்களை பயிற்றுவிக்கவும், அவர்களது திறன்களை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க தொகையை அசோக் லேலண்ட் முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்டின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான ஷேனு அகர்வால், "அசோக் லேலண்டில் பன்முகத்தன்மை மற்றும் திறமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாலின மற்றும் இன வேறுபாடின்றி சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். பெண்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது.
இந்த முயற்சி ஆனது 'கோய் மன்சில் டூர் நஹின்' என்ற எங்களது பிராண்ட் தத்துவத்திற்கு ஏற்ப உள்ளது. இந்த பெண்களின் திறமைகளை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் கனவுகளை நிஜமாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பாலின சமநிலையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இதுபோன்ற முயற்சிகள், எல்லாவற்றையும் நன்கு உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன" என்றார்.

மேலும் பேசிய ஷேனு அகர்வால், "புதுடெல்லியில் உள்ள எங்கள் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் கனரக வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை ஓட்டுவதில் பயிற்சி பெற 100 பெண்களை அழைக்கும் தனித்துவமான முயற்சியை இதன் மூலம் தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார். அசோக் லேலண்ட்டின் ஓசூர் தொழிற்சாலையில் எச்1 யூனிட்டில் புதிய பி15 என்ஜினை இந்த 80 பெண் பணியாளர்கள் உற்பத்தி செய்து அசெம்பிள் செய்வது மட்டுமின்றி, வாகனத்தில் பொருத்துவதற்கு முன்பாக சோதனை செய்யவும் உள்ளனர்.
புதிய பி15 என்ஜின் ஆனது எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையின் காரணமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மொத்தம் 2 விதமான ஷிஃப்ட்களாக இயக்கப்பட உள்ள இந்த புதிய பிரோடக்ஷன் லைனில் வருடத்திற்கு 62,000 என்ஜின்களை உருவாக்க முடியும் என்கிறது அசோக் லேலண்ட். இதேபோன்று பெண் தொழிலாளர்களை மேலும் பிரோடக்ஷன், அசெம்பிள் மற்றும் டெஸ்டிங் லைன்களில் அசோக் லேலண்ட் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









