இந்தியாவில் ஆடி நிறுவனத்துக்கு இப்படியொரு நிலைமையா!! சமாளிக்க முடியல... ஜனவரி 1இல் எடுக்க போகும் முடிவு
ஆடி நிறுவனம் இந்தியாவில் அதன் அனைத்து கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை வருகிற 2024ஆம் ஆண்டு முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்திய மார்க்கெட்டில் ஆடி கார்களின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும், இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஆடி கார்களை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று ஆடி. சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவுக்கு அடுத்த இடத்தில் ஆடி உள்ளது. ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் லக்சரி கார்களை விற்பனை செய்துவரும் ஆடி நிறுவனம் அவ்வப்போது புது, புது கார்களை மார்க்கெட்டில் களமிறக்குகிறது.

அதேநேரம், தனது பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் கார்களின் விலைகளை அதிகரிக்கவும் ஆடி மறந்தது இல்லை. ஏனெனில், கார்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகளும், போக்குவரத்து கட்டணங்களும் அவ்வப்போது கணிசமாக உயர்ந்துக் கொண்டே வருகின்றன. அதற்கேற்ப, விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகளை உயர்த்த வேண்டிய தேவை ஆடிக்கு மட்டுமில்லாமல், எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் ஏற்படுகிறது.
இந்த வகையில் ஆடி நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை 2% அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆடியின் இந்த புதிய விலை அதிகரிப்பானது வருகிற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கம்போல் இந்த விலை உயர்வுக்கு வாகன உற்பத்தி பாகங்களின் அதிகரித்துவரும் விலையையும், உற்பத்தி பணிகளுக்கான செலவையும் காரணமாக ஆடி கூறியுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பிர் சிங் தில்லோன் கருத்து தெரிவிக்கையில், "நிலையான வணிக மாதிரியின் மூலம் லாபத்தை அடைவது ஆடி இந்தியா நிறுவனத்தின் வணிக யுக்தியின் முக்கியமான பகுதியாக உள்ளது. மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்.
அதிகரித்துவரும் சப்ளை-செயின் தொடர்பான முதலீடுகள் மற்றும் செயல் பணிகளுக்கான செலவுகள் காரணமாக பிராண்டின் பிரீமியம் நிலையை பராமரிக்கும் வகையில், எங்கள் மாடல் வரம்பில் விலை நிறுத்தத்தை செய்துள்ளோம். விலை திருத்தமானது ஆடி இந்தியா மற்றும் எங்கள் டீலர் பார்ட்னர்களுக்கு நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், விலை உயர்வின் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை குறைவாக இருப்பதை உறுதி செய்வோம்" என்றார். ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் ஆடி முன்னிலையில் உள்ளது. இந்த 2023ஆம் வருடத்தின் முதல் 9 மாதங்களில் 5,530 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது 2022ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களை காட்டிலும் சுமார் 88% அதிகம் எனவும் கடந்த மாதத்தில் ஆடி அறிவித்தது.
ஆடி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்.எஸ் க்யூ8, க்யூ8 55 இ-ட்ரான், க்யூ8 ஸ்போர்ட்பேக் 50 இ-ட்ரான், க்யூ8 ஸ்போர்ட்பேக் 55 இ-ட்ரான், இ-ட்ரான் ஜிடி உள்ளிட்ட கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் இ-ட்ரான் என முடிபவை எலக்ட்ரிக் கார்கள் ஆகும். அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 1000க்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை ஆடி செயல்படுத்தி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி மட்டுமல்ல, இன்னும் நிறைய கார் நிறுவனங்கள் வருகிற 2024இல் அதன் கார்களின் விலைகளை உயர்த்த தயாராகி வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில், ஆடியின் 2% விலை அதிகரிப்பு ஏற்கக்கூடியதே. அதாவது, ரூ.50 இலட்சம் விலை கொண்ட ஆடி காரின் விலை ரூ.1 இலட்சம் வரையில் அதிகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications









