விநாயகர் சதுர்த்தி அதுவுமா விற்பனைக்கு வந்துள்ள புதிய ஆடி கார்!! டார்க் சாக்லெட் மாதிரி இருக்கு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளான இன்று (செப்.18) ஆடி க்யூ5 (Audi Q5) லக்சரி எஸ்யூவி காரில் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய க்யூ5 லிமிடெட் எடிசனின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு, சந்தையில் புது புது வாகனங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில், ஆடி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருப்பது ஆடி க்யூ5 லிமிடெட் எடிசன் ஆகும்.

ஆடி க்யூ5 லக்சரி எஸ்யூவி காரின் வழக்கமான டெக்னாலஜி வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய லிமிடெட் எடிசன் குறைவான காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். அதாவது, இந்த காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டிருக்கும். அதுவரையில் மட்டுமே, க்யூ5 லிமிடெட் எடிசன் விற்பனையில் இருக்கும்.
மைதோஸ் பிளாக் நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69,72,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காரின் வெளிப்பக்கம் மைதோஸ் கருப்பு நிறத்தில் இருக்க, உட்பக்கம் ஆனது ஒகாபி பிரவுன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த லிமிடெட் எடிசன் காரில் கூடுதல் வசதிகளாக பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேக்கேஜின் மூலம் ஆடி பிராண்டின் லோகோ வளையங்கள் கருப்பு நிறத்தில் கிடைக்கும். அத்துடன், காரின் முன்பக்க கிரில் மற்றும் மேற்கூரையில் வழங்கப்படும் கம்பிகளும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன், குறைவான ஆற்றலை பெற்று அதிக ஒளியை உமிழக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள், பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப், கீலெஸ் எண்ட்ரீ, சென்சார் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய பூட் லிட் உள்ளிட்டவையும் புதிய க்யூ5 லிமிடெட் எடிசனின் வெளிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் உட்பக்க கேபின் ஆனது பிளஷ் லெதர் மற்றும் லெதரேட் கலவையில் உருவாக்கப்பட்டு உள்ளது. டேஸ்போர்டில் ஆடியின் லேட்டஸ்ட் எம்.எம்.ஐ நாவிகேஷன் பிளஸ் வசதியை கொண்ட 26.65 செமீ மல்டி மீடியா வண்ண திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஓட்டுனருக்கு நேரெதிராக ஃபுல் எச்டி தரத்தில் 31.24 செ.மீ விர்டியூவல் காக்பிட் பிளஸ் டிஸ்பிளேவும் இந்த காரில் கிடைக்கும்.
மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக, 19 ஸ்பீக்கர்கள் உடன் பி&ஓ பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், பயணிகளின் பாதுகாப்பிற்கு 8 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட், முன்பக்கத்தில் மெமரி வசதி உடன் பவர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் உடன் ஆடி போன் பாக்ஸ், 3-ஸோன் ஏசி மற்றும் 30 விதமான நிறங்களை வழங்கக்கூடிய கேபின் லைட்ஸ் பேக்கேஜ் போன்றவையும் புதிய க்யூ5 லிமிடெட் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன.
மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸில் மாற்றமில்லை. ஆடி க்யூ5 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 265 எச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.1 வினாடிகளிலும், அதிகப்பட்சமாக 240kmph வேகத்தையும் இந்த லக்சரி எஸ்யூவி காரில் எட்ட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி க்யூ5 எஸ்யூவி கார் அதன் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் போனது. அத்தகைய காருக்கு முற்றிலும் கருப்பு நிற பெயிண்ட் மிகவும் எடுப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். குறிப்பாக, ஆடி பிராண்ட் லோகோ கூட மைதோஸ் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருப்பதால், மொத்தமாக கார் பார்க்க ஓர் டார்க் சாக்லெட் போன்று உள்ளது. ஆதலால், இந்த பண்டிகை காலத்தில் லக்சரி காரை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு ஆடியின் இந்த புதிய லிமிடெட் எடிசன் சரியான தேர்வே ஆகும்.


Click it and Unblock the Notifications








