தனக்கான மின்சார காரை தானே தயாரித்த ஆட்டோ டிரைவர்! ஃபுல் சார்ஜ்ல 100கிமீ போகும்! இவ்ளோ கம்மியாதான் செலவாச்சா!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய தேவைக்கேற்ப ஓர் எலெக்ட்ரிக் வண்டியை தயார் செய்திருக்கின்றார். அந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய தேவைக்கேற்ப ஓர் மின்சார வாகனத்தை வடிவமைத்து, அதனை உருவாக்கியும் இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் சுவாரஷ்யமான தகவலாக அவர் தற்போது அந்த வாகனத்தை பயன்படுத்தவும் தொடங்கி இருக்கின்றார். இந்த ஆச்சரியத்திற்கு சொந்தமானவர் ஆந்திரா மாநிலம், கர்னூலில் உள்ள உண்டவள்ளி மண்டலை அடுத்திருக்கும் சின்னஞ் சிறு கிராமம் பொங்குருவைச் சேர்ந்த பீச்சுபள்ளி என்பவரே ஆவார்.

Source: News18
ஆட்டோ ஓட்டுநரான இவர், தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் இந்த சூப்பரான எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து அசத்தி இருக்கின்றார். ஆட்டோ டிரைவரின் இச்-சாதனைக்கு தற்போது மக்கள் மத்தியில் பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தனக்கு கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்து அவர் எளிமையான மின்சார வாகனத்தை (காரை) தயாரித்து இருக்கின்றார்.
ஒரு முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் கார் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆச்சரியத்தை இன்னும் கூட்டும் வகையில் இந்த தகவல் அமைந்திருக்கின்றது. தன்னுடைய சிறு வயதில் இருந்தே வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக பீச்சுபள்ளி இருக்கின்றார்.
மேலும், அவருக்கு ஓர் கார் வாங்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்திருக்கின்றது. ஆனால், குடும்ப சூழல் அவரின் கனவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால், அவருடைய புதிய கார் கனவு தற்போதும் கனவாகவே இருக்கின்றது. ஓர் புதிய காரை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 4 லட்சம் முதல் 5 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கும்.
எலெக்ட்ரிக் வாகனம் எனில் குறந்தபட்சம் 8-9 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையிலேயே தனக்கு தேவையான வாகனத்தை தானே மிகவும் எளிமையான முறையில் பீச்சுபள்ளி தயார் செய்திருக்கின்றார். இந்த வாகனத்தை உருவாக்குவதற்காக அவர் மாருதி 800 காரின் பாகங்கள் சிலவற்றை பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், நான்கு பேட்டரிகள், ஓர் டிசி மோட்டார், 48 வாட் கன்ட்ரோல்லர் மற்றும் பிற சாதனங்களையும் அவர் எலெக்ட்ரிக் வாகன கட்டுமானத்திற்காக பயன்படுத்தி இருக்கின்றார். 100 வாட் திறன் கொண்ட டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
பீச்சுபள்ளி, எலெக்ட்ரிக் வாகனத்தை ஒரே நாளில் கட்டமைத்திருக்கின்றார். பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் லீட் ஆசிட் பேட்டரிகள் ஆகும். இது அவ்வளவு தீ விபத்திற்கு ஆளாகது என கூறப்படுகின்றது. ஆகையால், எலெக்ட்ரிக் வாகனத்தில் பயணிக்கும்போது ஆபத்து இருக்காது என கூறப்படுகின்றது. இந்த வாகனத்தை முழுமையாக கட்டமைக்க அவருக்கு ரூ. 1.20 லட்சம் வரை செலவாகியதாகக் கூறப்படுகின்றது.
ஒரே நேரத்தில் பத்து பேர் வரை பீச்சுபள்ளி தயாரித்த எலெக்ட்ரிக் வாகனத்தில் அமர்ந்து பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மட்டுமே செலவாகுவதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 80 கிமீ முதல் 100 கிமீ வரை பயணிக்க முடியும். வழக்கமான டீசல், கேஸ் ஆட்டோவைவிட இது அதிகம் லாபம் தரக்கூடியதாக இருப்பதாக பூச்சுபள்ளு கூறுகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷனுக்கு அனுமதி இல்லை. இதேபோல், தனிபட்ட நபர் தங்களுக்கான வாகனங்களை இதுபோன்று கலப்பினம் செய்து, வேறு வாகனங்களின் பாகங்களைக் கொண்டு தயாரித்து பயன்படுத்தவும் அனுமதி இல்லை. இத்தகைய வாகனங்கள் போக்குவரத்து காவலர்களின் கண்களில் படும் எனில் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்படும். ஆகையால், பீச்சுபள்ளி தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனத்திற்கு முறையான அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications