8கோடி ரூபா ஆடி காரை வாங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வறுத்தெடுக்கும் இந்தியர்கள்! நம்ம ஊர பாக்காம பேசுறாங்க
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர் பாபர் அசாம். நேபாளத்திற்கு எதிரான ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததில் இவரின் பங்களிப்பு மிகவும் பெரியது. இதனால்தான் ஒட்டுமொத்த பாகிஸ்தானே பாபர் அசாமை தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே பாபர் அசாமுக்கு அவரது சகோதரர் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். ஆடி இ-ட்ரான் சொகுசு காரையே பாபர் அசாமுக்கு அவரது சகோதரர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த காரின் மதிப்பு பாகிஸ்தானில் ரூ. 8.1 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

ஆகையால், அந்நாட்டின் மிகவும் காஸ்ட்லியான கிஃப்டாக இது மாறி இருக்கின்றது. இந்த விலை உயர்ந்த கார் பரிசளிப்பை தன்னுடைய ரசிகர்களுக்கும், வெளி உலகிற்கும் தெரியப்படுத்தும் விதமாக பாபர் அசாம், அந்த காரையும், அவருக்கு அவரது சகோதரர் பரிசாக வழங்கி இருப்பதையும் வீடியோவாக யுட்யூப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றார்.
பாபர் அசாமும், அவரது சகோதரர் ஃபைசல் அசாமும் இணைந்தே வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த யுட்யூப் சேனல் ஃபைசல் அசாமுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வீடியோவே தற்போது கிரிக்கெட் உலகில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பலர் பாபர் அசாமுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

தனக்கு இந்த கார் மிகவும் பிடித்திருப்பதாகவும், இனி தன்னுடைய பயணங்களை இந்த காரிலேயே மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே பாபர் அசாமை இந்தியர்கள் சிலர் வறுத்தெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 2 கோடிக்கும் குறைவே என்றும், இதையா 8 கோடி ரூபா கொடுத்திருக்கீங்க என்று சிலர் கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
மேலும், இந்தியா ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விராட் கோலி இருக்கின்றார். ஆகையால் விராட் இடத்தில் ஏகப்பட்ட ஆடி சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆகையால், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும் ட்ரோல் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலும் இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றனர். ஏன் நம்ம கிரிக்கெட் வீரர்கள் சிலரும் இந்த எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 484 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் 95 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், 408 பிஎச்பி பவர் மற்றும் 664 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது தவிர, 360 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மோட்டார் கொண்ட தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றது.
சொகுசு எலெக்ட்ரிக் காரான ஆடி இ-ட்ரானில் நான்கு ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட திரை, ஆம்பிசியன்ட் மின் விளக்கு என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான காரையே பாபர் அசாமுக்கு அவரது சகோதரர் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். இதையே இந்தியர்கள் சிலர் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் சிலர் செய்து வரும் இந்தச்செயல் வேண்டத்தகாதாகும். என்னதான் பகை நாடாக இருந்தாலும் மனிதர்களின் உணர்வுகளுக்கு உணர்வு கொடுத்தாக வேண்டும். பாகிஸ்தானில் அதிகம் விலை என நாம் கிண்டலடிக்க நேரிட்டால், உலக நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன. இதற்காக நம்மை பிறர் கலாய்க்கத் தொடங்கலாம். ஆகையால், இதுபோன்று பிறர் மனம் புண்படுகின்ற செயலில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.


Click it and Unblock the Notifications









