கார் ஓட்டும்போது நிறைய பேர் இந்த தவறுகளை செய்றாங்க... சர்வீஸ் விட்டாலும் அப்புறம் வேலைக்கு ஆகாது!!
கார் டிரைவிங் ஸ்டைல் ஒருத்தரிடம் இருந்து ஒருத்தருக்கு சற்று வித்தியாசப்படுவது வழக்கமான ஒன்று தான். இதனால்தான் கார் மைலேஜ்ஜும், காரின் செயல்படுதிறனும் வேறுப்படுகிறது. நம்மில் சிலர் காரை இயக்கும்போது சில தவறுகளை நம்மை அறியாமலேயே செய்து விடுகிறோம். சில நேரங்களில், அதிக பராமரிப்பு செலவுக்கு கூட நம்மை ஆளாக்கிவிடக்கூடிய அந்த சிறு சிறு தவறுகள் என்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
குறைந்த எரிபொருளில் காரை இயக்குவது: எரிபொருள் டேங்கில் குறைந்த அளவிலான எரிபொருளை வைத்து கொண்டு காரை இயக்குவது காரின் எரிபொருள் குழாயை பாதிக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. எப்போவாவது ஒருமுறை இவ்வாறு இயக்கினால் பரவாயில்லை, ஆனால் பெரும்பாலான நேரங்களில் குறைந்த எரிபொருள் உடன் காரை இயக்குவது எரிபொருள் குழாயை பாதிக்கும். ஏனெனில் போதிய அளவு எரிபொருள் இல்லாததால், காற்றினாலும், அழுக்குகளாலும் எரிபொருள் செல்லும் குழாய் பாதிக்கும்.

இறங்குமுகமாக இயங்கும்போது நியூட்ரலை பயன்படுத்துவது: இறங்குமுகமான சாலைகளில் இயங்கும்போது காரின் கியரை நியூட்ரலுக்கு கொண்டுவராதீர்கள். நியூட்ரலுக்கு கொண்டுவருவதினால், பிரேக் கொடுக்க முடியும், ஆனால் காரின் வேகத்தை உடனடியாக அதிகரிக்க இயலாது. அதற்காக, இவ்வாறான இறங்குமுக சாலைகளில் ஏதேனும் ஒரு கியரில் இயங்கும்போது வேகத்தை குறைக்க பிரேக்கை விட்டு விட்டு அழுத்துவதால், விரைவாக பிரேக் டிஸ்க்குகள் மற்றும் பிரேக் பேட்கள் பழுதடையலாம்.
கியரை மாற்றும்போது க்ளட்ச்சை பயன்படுத்தாது: க்ளட்ச்சின் முக்கிய பணி என்னவென்றால், என்ஜினிற்கும், டிரான்ஸ்மிஷனுக்கும் இடையேயான இணைப்பை கண்ட்ரோல் செய்வதாகும். கியரை மாற்றும்போது க்ளட்ச்சை பயன்படுத்தவில்லை எனில், அதாவது க்ளட்ச் பேடை மிதிக்கவில்லை எனில் அது காரின் என்ஜினிற்கும், கியர்பாக்ஸுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோன்று சிலர், எப்போதும் தனது ஒரு காலை க்ளட்ச் பேடின் மீது வைத்திருப்பார்கள். இது க்ளட்ச் பேடின் ஆயுட்காலத்தை குறைக்கும்.

கியரில் காரை நிறுத்துவது: காரை கியரில் நிறுத்துவது பரவலாக பலரிடம் உள்ள பழக்கமாக உள்ளது. இது குறிப்பாக, மேனுவல் கார்களில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. கியரில் காரை நிறுத்திவிட்டு செல்வதால் க்ளட்ச் பேட் விரைவாக பழுதாக நேரலாம். இதனால், எப்போதும் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி, காரை நியூட்ரலில் நிறுத்த பாருங்கள்.
டயரில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்காதது: காரின் டயர்களில் இந்த அழுத்தத்திற்குள் தான் காற்று இருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் ஓனர் மேனுவல் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும். டயரில் காற்று அதற்கு கீழ் இருந்தாலும் சரி அல்லது அதற்கு அதிகமாக இருந்தாலும் சரி அது நேரடியாக டயரின் ஆயுட்காலத்தை தான் பாதிக்க செய்யும். அதேபோன்று, சிலர் பள்ளம், மேடுகளிலும் காரை வேகமாக இயக்குவர். இது சஸ்பென்ஷன் செட்-அப்பையும் பழுதடைய செய்யலாம்.

என்ஜினை சூடாக நேரம் கொடுக்காதது: நம்மில் பலர் சாவியை நுழைத்து காரை ஸ்டார்ட் செய்தவுடன், என்ஜினையும் ஸ்டார்ட் செய்து இயக்க ஆரம்பித்துவிடுவோம். இதில் நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை, ஏனெனில் நாம் பல நேரங்களில் அவசர அவசரமாகவே காரை எடுக்கிறோம். ஆனால் இவ்வாறு ஓய்வில் இருந்த என்ஜினை சூடாக நேரம் கொடுக்காமல் ஸ்டார்ட் செய்வதால் காரில் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காரை வாங்குவதை காட்டிலும், அதனை முறையாக பராமரிப்பதுதான் பெரிய விஷயம் என்கிற கருத்தை நிச்சயமாக உங்களில் பலர் மற்றவர்கள் கூற கேட்டு இருப்பீர்கள். ஆதலால் எந்த பிராண்டில் இருந்து கார் வாங்கினாலும் சரி, தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்திய படி குறிப்பிட்ட காலத்தில் சர்வீஸ் செய்துவிடுவது நல்லது. காரில் எந்த பழுதும் இருப்பதுபோல் நீங்கள் உணராவிடினும் சர்வீஸ் செய்ய மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









