சீனாவில் நிறைய பேர் இந்த காரின் அறிமுகத்துக்கு தான் வெயிட்டிங்!! துபாய் ராயல் ஃபேமலியும் கூட!
பி.ஏ.ஐ.சி (BAIC) நிறுவனம் அதன் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி காரை 'பிஜே60' (BJ60) என்ற பெயரில் உலகளவில் வெளியீடு செய்துள்ளது. துபாயில் கெம்பின்ஸ்கி தி பால்ம் என்ற நட்சத்திர ஓட்டலில் இந்த சொகுசு எஸ்யூவி காரின் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சீன காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
பிரபலமான சீன கார் நிறுவனமான பிஏஐசி பல்வேறு வெளிநாடுகளிலும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து புதிய பிஜே60 என்ற எஸ்யூவி கார் வெளிவரவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே கூறிவந்தோம். அதன்படி, துபாயில் இருந்து இந்த புதிய பிஏஐசி கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

துபாயின் கெம்பின்ஸ்கி தி பால்ம் என்ற ஓட்டலில் நடத்தப்பட்ட பிஏஐசி காரின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். துபாய் ராயல் குடும்பங்களை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பிஏஐசி நிறுவனம் ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களையும் விற்பனை செய்கிறது. அவற்றுள் புதிய மாடலாக பிஜே60 இணைந்துள்ளது.
ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள் என்றால், இவற்றை சாதாரண சாலைகளை ஓட்டுவது மட்டுமின்றி, தைரியமாக மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை-அற்ற பாதைகளுக்கும் கொண்டுச் செல்லலாம். பிஜே60 காரை முதன்முதலாக கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் பிஏஐசி நிறுவனம் காட்சிக்கு நிறுத்தியது.

பிஏஐசி பிஜே60 காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 248 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இந்த மோட்டார் செட்-அப்பின் மூலமாக கூடுதலாக 13.4 பிஎச்பி மற்றும் 50 என்எம் டார்க் திறனை பெறலாம்.
இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது ஸ்விட்ச் செய்யக்கூடிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கும். 2எச், 4எச் மற்றும் 4எல் என்பது இந்த காரில் வழங்கப்பட்டுள்ள டிரைவிங் மோட்கள் ஆகும். இவற்றை காருக்குள் மைய கன்சோல் பகுதியில் வழங்கப்பட்டுள்ள டயல் மூலமாக தேர்வு செய்துக் கொள்ளலாம்.

கரடு, முரடான சாலைகளில் இயங்குவதற்கு ஏதுவாக புதிய பிஜே60 காரில் 3 டிஃப்ரென்ஷியல் லாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பாடி-ஆன்-ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள பிஜே60 காரில் முன்பக்கத்தில் விஷ்போன் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மல்டி-லிங்க் செட்-அப்பும் இடம்பெற்றுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பிஜே60 காரில் 18 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை விருப்பப்பட்டால், வாடிக்கையாளர்கள் 20 இன்ச்களாகவும் பெறலாம். ஸ்பேர் சக்கரம் உள்பட காரின் அனைத்து சக்கரங்களிலும் கூப்பர் டயர் டிஸ்கவரர் ஏடிஎஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டகம் வடிவில் உடலமைப்பை கொண்ட இந்த காரின் முன்பக்கத்தை 5-சதுர டிசைனில் க்ரில் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவில் பொதுவாகவே இவ்வாறான கம்பீரமான தோற்றம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த காரை ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால், காருக்கான புக்கிங் துவங்கியவுடன் கூட்டம் குவிய போகிறது. ஆனால், இந்த பிஏஐசி கார் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏனெனில் தற்போதைக்கு, எந்த பிஏஐசி காரும் இந்தியாவில் விற்பனையில் இல்லை.


Click it and Unblock the Notifications
