எப்பவுமே கப்பல்ல போற மாதிரியான ஃபீல்ல டிராவல் பண்ணனுமா? இந்த காருல முடியும்! ஃபுல் சார்ஜ்ல பெங்களூரு போயிடலாம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 (BMW iX1) எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த ஆடம்பர எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்ன? ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் ப்யூர் எலெக்ட்ரிக் கார் மாடலான ஐஎக்ஸ்1 எக்ஸ் டிரைவ் 30 (BMW iX1 xDrive30) எஸ்யூவி ரக காரையே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 440 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ரேஞ்ஜ் திறனைக் கொண்டு சென்னையில் இருந்து பெங்களூரு போயிட்டு, மீண்டும் தமிழகத்தின் எல்லை பகுதிக்கே திரும்பி வந்துவிட முடியும். இந்த அளவிற்கு மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடிய எலெக்ட்ரிக் காரையே ஜெர்மானிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதற்கு அறிமுகமாக ரூ. 66.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை அதன் எக்ஸ்1 மாடலை தழுவி உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றே இந்த எக்ஸ்1 என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே அதை தழுவி தற்போது ஐஎக்ஸ்1 எனும் எலெக்ட்ரிக் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எக்ஸ்1 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாலோ என்னமோ, பார்ப்பதற்கு அச்சு அசலாக இந்த ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் கார் எக்ஸ்1 மாடலைப் போலவே காட்சியளிக்கின்றது.
அதேவேளையில், ஐஎக்ஸ்1 என்கிற பேட்ஜ் மட்டுமே இந்த கார்களில் இருக்கும் வித்தியாசமாக இருக்கின்றது. இதுவே ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டிற்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமாக இருக்கின்றது. இதுதவிர இன்னும் சில மாற்றங்கள் வெளிப்புறத்தில் இவை இரண்டிற்கும் இடையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐஎக்ஸ்1-இல் பிஎம்டபிள்யூ செய்திருக்கின்றது.
இந்த கார் எப்படி ரேஞ்ஜ் தரும் விஷயத்தில் நம்மை அசர வைக்கின்றதோ, அதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் நம்மை அசர செய்யும் வகையில் இருக்கின்றது. 10.7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ ஐடிரைவ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 10.25 அங்குல டிஜிட்டல் திரை ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை அலுமினியம் வலை அமைப்பில் இருக்கும். இந்த காரில் 490 லிட்டர் வரையிலான அளவுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் இந்த காரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.
அந்தவகையில், கிரே (grey), சில்வர் (silver), பிளாக் (black) மற்றும் (white) ஆகியவையே அவை ஆகும். பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்த வரை இந்த காரில் ஏபிஎஸ், இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இன்னொரு கூடுதல் அம்சமாக செயற்கை எஞ்ஜின் ஒலியை எழுப்பும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் அமைதியான வகையில் இயங்கக் கூடிய மின்சார மோட்டாரே ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலை ஆபத்தான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்பதன் அடிப்படையிலேயே செயற்கை எஞ்ஜின் ஒலியை எழுப்பும் திறன் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மின்சார மோட்டார் அதிகபட்சமாக 313 எச்பி மற்றும் 494 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க இதனால் வெறும் 5.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் டிராவல் செய்ய முடியும்.
இந்த கார் ஓர் முழு சார்ஜில் 440 கிமீ தூரம் வரை டிராவல் செய்யும் என நாங்கள் கூறி இருந்தோம். இந்த சூப்பரான மற்றும் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 66.4 kWh பேட்டரி பேக் ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த பேட்டரியை 11 kW ஏசி சார்ஜர் தொடங்கி 130 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என பலதரப்பட்டு பாயிண்டுகளில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், 130 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும்போது வெறும் 29 செகண்டுகளிலேயே 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு வகை எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வருகை வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ், ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இவி6, மெர்சிடிஸ் இக்யூபி உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








