ரூ1 கோடிப்பு! பிஎம்டபிள்யூ கம்மி பட்ஜெட்டில் வெளியிட்ட எம்2 பெர்ஃபாமென்ஸ் கார்!
பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ98 லட்சம் என்ற விலையில் எம்2 என்ற பெர்ஃபாமென்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு பிஎம்டபிள்யூ விற்பனைக்கு வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஜெர்மன் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது பெர்ஃபாமென்ஸ் காரான எம்2 என்ற 2 டோர் 4 சீட்டர் காரை ரூ1 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிற்குள் இந்தியாவில் களம் இறக்கியுள்ளது. இந்த கார் சாலையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 453 எச்பி பவரையும் 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.1 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சமாக 285 கி.மீ வேகம் வரை சீறிப் பாயும் தன்மை கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் எலெக்ட்ரானிக் முறையில் 285 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் கியர் பாக்ஸை பொருத்தவரை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரோனிக் கியர் பாக்ஸை பொருத்தியுள்ளது.
இந்த காரில் மொத்தம் 3 விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. கம்ஃபோர்ட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் ஆகிய டிரைவிங் மோட்கள் உள்ளன. இன்ஜினும் அதற்குத் தகுந்தார் போல அதிக மைலேஜ், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் + என ட்வீக் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் திறன் சாலையில் வெகு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எம்2 காரில் முன்பக்கம் புதிய கிட்னி கிரிலில் நீளமான ஸ்லாட்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரில் பகுதி முன்பக்கம் உள்ள 3 செக்ஷன் ஏப்ரானிற்கு மேலே பொருத்தப்பட்டுள்ளது. இந்த பகுதி இன்ஜின் மற்றும் பிரேக்கை குளிர்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் போல்டான பம்பர், பெரிய டிஃப்யூசர், மற்றும்4 எக்ஸாஸ்ட் பைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் 19/20- இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதன் உட்புற கட்டமைப்பு எம் பேட்ஜிங் டிசைனை அனைத்து இடங்களிலும் வைத்துள்ளது. இந்த காரின் உட்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எம் டைனமிக் மோடு, கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், டிரை பிரேக்கிங் ஃபங்சன், மற்றும் ஆக்டிவ் எம் டிஃப்ரன்ஷியல் ஆகியன இந்த காரில் இருக்கிறது. இந்த கார் ரூ98 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எம்2 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெர்ஃபாமென்ஸ் கார் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த காரை இந்திய மண்ணில் காண பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த காரை இந்தியாவில் யார் முதலில் வாங்கப்போகிறார்கள்? இதை பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









