பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதிய எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் (X3 20d M Sport) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ சொகுசு காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூவின் அளவில் சிறிய எஸ்யூவி கார் மாடல் எக்ஸ்3 ஆகும். நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் தற்போது அதன் புதிய மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயரில் 20டி என்பது டீசல் என்ஜினை குறிப்பதாகும். ஏனெனில் இந்தியாவில் இம்முறை பெட்ரோல் என்ஜின் அல்லாமல் டீசல் என்ஜின் தேர்வில் மட்டுமே பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.69.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களாக ரீ டிசைனிலான முன் & பின் பம்பர்கள், கருப்பு நிறத்தில் ஜன்னல் கண்ணாடி சட்டகம், ரூஃப் ரெயில் மற்றும் டிஃப்யூஸர் உள்ளிட்டவற்றை எக்ஸ்3 எஸ்யூவி கார் ஏற்றுள்ளது. அத்துடன் இந்த டீசல் லக்சரி காரில் பெரிய அளவில் 20-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் நீல நிறத்தில் பிரேக் காலிபர்கள் உள்ளன.
உட்பக்கத்தில் ஸ்போர்டியான தோற்றத்திலான ப்ரஷ்டு அலுமினியம் ட்ரிம், எம்-ஸ்பெக் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், பனோராமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், 360-டிகிரி கேமிரா, ஹெட்-அப் திரை, கேபினை சுற்றிலும் விளக்குகள், 16 ஸ்பீக்கர்கள் உடன் 464 வாட்ஸ் ஹெர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க பூட் ஸ்பேஸ் ஆனது புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் 550 லிட்டர்களாகும். இதனை 2வது இருக்கை வரிசையை மடக்குவதன் மூலமாக 1600 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது.
இந்த டீசல் என்ஜின் உடன் முன்னதாக 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் வழங்கப்பட்டு வந்தது. புதிய எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் காரில் பாதுகாப்பு அம்சங்களாக அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள், டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் உடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சைடு-இம்பேக்ட் பிரோடக்ஷன், எலக்ட்ரானிக் வைகல் இம்பொளிசர் & கிராஸ் சென்சார் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் என ஏகப்பட்டவை இடம்பெற்றுள்ளன.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாத மத்தியில் எக்ஸ்3 20டி லக்சரி எடிசன் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெஷல் எடிசனாக அறிமுகப்படுத்தப்பட்ட அதனை காட்டிலும் ஸ்போர்டியர் தோற்றத்தை கொண்டதாக புதிய எக்ஸ்3 20டி எம் ஸ்போர்ட் மாடல் விளங்குகிறது. ஏனெனில் இந்த புதிய எக்ஸ்3 மாடலில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரத்யேக 'எம்' பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்3 20டி லக்சரி எடிசன் காரிலும் டீசல் என்ஜின் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த லக்சரி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்3 காரின் இந்த லக்சரி எடிசனில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 213கிமீ ஆகும். எக்ஸ்3 காருக்கான சேவைகளை இரு விதமான தேர்வுகளாக பிஎம்டபிள்யூ வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








