கம்மியான விலையில் டீசல் கார்களை இந்தியால வாங்கணுமா? இதோ லிஸ்ட்.. இவைதான் நாட்டின் மலிவு விலை டீசல் கார்கள்!
புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில டீசல் எஞ்ஜின் தேர்வுகளை விற்பனையில் இருந்து அகற்றிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, மலிவு விலையில் விற்கப்படும் சிறிய டீசல் எஞ்ஜின் கொண்ட மாடல்கள் பல கடந்த காலங்களில் அகற்றப்பட்டு இருக்கின்றன.
இதன் விளைவாக கடந்த காலங்களில் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருந்த கார் மாடல்கள் சில தற்போது லேசான விற்பனைச் சரிவைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஒரு சில நிறுவனங்கள் இப்போதும் சற்று குறைவான விலையில் டீசல் தேர்வுக் கொண்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ் 6 கட்டம் 2 செயல்பாட்டிற்கு வந்த பின்னரும் கணிசமான அளவு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் டாப் 5 குறைந்த விலை டீசல் கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்தியாவின் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் அல்ட்ராஸும் ஒன்று. தற்போது, இந்தியாவில் இந்த ஹேட்ச்பேக் கார் மாடலில் மட்டுமே டீசல் எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றது. ஆகையால், நாட்டின் ஒரே ஒரு டீசல் ஹேட்ச்பேக் கார் மாடலாக அல்ட்ராஸ் காட்சியளிக்கின்றது.

1.5 லிட்டர் டர்போசார்ஜட், இன்லைன் யூனிட் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் மோட்டார் அதிகபட்சமாக 88.7 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வும் இந்த காரில் வழங்கப்படுகின்றது.
ஃபேமிலியுடன் பிரீமியம் வசதிகள் கொண்ட காரில் டிராவல் பண்ண விரும்புபவர்களுக்கு ஏற்ற கார் மாடலாக டாடா அல்ட்ராஸ் இருக்கின்றது. ரூ. 8 லட்சம் தொடங்கி ரூ. 10.40 லட்சம் என்கிற விலையில் அல்ட்ராஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் பொலிரோ (Mahindra Bolero Neo/ Bolero): டாடா அல்ட்ராஸ் கார் மாடலுக்கு அடுத்தபடியாக மலிவு விலையில் டீசல் எஞ்ஜின் தேர்வில் இந்த கார் மாடல்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. பொலிரோ நியோ, ரூ. 9.62 லட்சம் தொடங்கி 12.14 லட்ச ரூபாய் வரையிலான விலையிலும், பொலிரோ ரூ. 9.78 லட்சம் தொடங்கி ரூ. 10.79 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றது.
பெரிய குடும்பங்களுக்கு எஸ்யூவி ரக கார்களாக இவை இருக்கின்றன. இந்த இரு கார்களிலும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 3 எஞ்ஜின் சிலிண்டரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது பவர்ஃபுல் மோட்டார் ஆகும். அதிகபட்சமாக பொலிரோ நியோவில் 100 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கையும், பொலிரோவில் 74.9 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வே வழங்கப்படுகின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300): மஹிந்திராவின் மற்றுமொரு குறைந்த விலை டீசல் எஞ்ஜின் கொண்ட கார் மாடலாக எக்ஸ்யூவி300 காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ.9.90 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ.14.60 லட்சம் ஆகும். இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜட், இன்லைன் 4ஆயில் பர்னர் டீசல் மோட்டாரே வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 115 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

கியா சொனெட் (Kia Sonet): இந்தியாவில் இந்த கார் ரூ. 9.95 லட்சம் தொடங்கி ரூ. 14.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் இப்போது நிலவரப்படி அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடலாகவும் இருக்கின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்டர் டீசல் மோட்டாரையே கியா பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டாரால் அதிகபட்சமாக 113.4 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): நாட்டின் அதிகம் விற்பனையாகும் மற்றும் இந்த பட்டியலின் சற்று அதிக விலைக் கொண்ட டீசல் மோட்டார் கார் மாடலாக நெக்ஸான் உள்ளது. அதிக பாதுகாப்பான கார் மாடல் இதுவாகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதன் விலை ரூ.10 லட்சம்-ரூ.13.70 லட்சம் ஆகும். 1.5லிட்டர் டர்போசார்ஜட் 4சிலிண்டர் டீசல் எஞ்ஜினே நெக்ஸானில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே இந்தியாவின் மலிவு விலை டீசல் கார் மாடல்கள் ஆகும். இதைவிட குறைவான விலையில் டீசல் எஞ்ஜின் கொண்ட கார்களை வாங்க முடியாது. அதேவேளையில், மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்ரோடில் இதைவிட சற்று அதிக விலையைக் கொண்டதாக அவை காட்சியளிக்கும்.


Click it and Unblock the Notifications









