ஒரு காரையே இந்த பஸ்ஸுக்குள்ள நிப்பாட்டிக்கலாம்! அம்பானியின் அன்டிலியா வீட்டையே மிஞ்சும் வசதிக் கொண்ட பேருந்து!
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. மும்பையில் உள்ள இவரது அன்டிலியா இல்லத்தில் கார்களை நிறுத்துவதற்கு என்றே தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இல்லத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் பேருந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றது.
நம்பிதான் ஆக வேண்டும், காரை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு தனி பார்க்கிங் வசதிக் கொண்ட பேருந்து தற்போது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. "பேருந்துல கார் பார்க்கிங்கா" என வாயடைச்சு போயிட்டீங்களா.. இந்த பேருந்து பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே எடுத்து சென்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஏனெனில், பேருந்தை பேருந்தாக அல்லாமல் பற்பல அதி நவீன மற்றும் சொகுசு வசதிகளை தாங்கிய வாகனமாக வடிவமைத்திருக்கின்றனர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த டெம்பெல் (Dembell) எனும் நிறுவனமே இந்த சூப்பரான பேருந்தை தயார் செய்திருக்கும் நிறுவனம் ஆகும். இந்த பேருந்தை உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாககூட கருதலாம்.
அந்தளவிற்கு அதிசயிக்கத்தக்க வகையிலேயே நேர்த்தியாக அப்பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை குட்டி வீடு, குட்டி சொகுசு மாளிகை மற்றும் மினி ஐடிசி கிராண்ட் சோலா என்றெல்லாம்கூட கூறலாம். ஆனால், இந்த வர்த்தைகள் எதுவும் பேருந்திற்கு மிகையாகாது. அந்த அளவிற்கு ஓர் ஆடம்பர வாகனமாக இதனை தயார் செய்திருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாகவே கார் நிறுத்தம் வசதி உள்ளது. இந்த வசதி மட்டுமின்றி லிவிங் ரூம், மாடர்ன் ஃபர்னிச்சர்கள் (கட்டில், இருக்கைகள்) உள்ளிட்டவையும் பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதைவிட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இன்டக்சன் ஸ்டவ், ஓவன், மினி குளிர்சாதன பெட்டி மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் கருவி உள்ளிட்ட சகல வசதிகள் கொண்ட குட்டி சமையல் அறையும் பேருந்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், ஓர் குட்டி குளியலைப் போடுவதற்கான குளியல் மற்றும் கழிவறைகளையும் இந்த பேருந்தில் வழங்கி இருக்கின்றனர். அனைத்து தேவைகளையும் பேருந்தின் உட்பகுதியிலேயே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கிற காரணத்திற்காக இதுபோன்ற பற்பல வசதிகளை வடிவமைப்பாளர்கள் அந்த பேருந்தில் வழங்கி இருக்கின்றனர்.

இந்த பேருந்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகள் சிலவற்றில் மசாஜ் மற்றும் ஹீட்டிங் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பேருந்தில் வழங்கப்பட்டிருக்கும் மெத்தையில் இரண்டு பேர் வரை தாராளமாக படுத்துறங்க முடியும். இது அதிக சொகுசான மெத்தையாகும். மெத்தையில் படுத்தவாறு வெளியுலகைக் கண்டு ரசிக்க முடியும்.
இதற்காக பெரிய ஜன்னல்கள் பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், புதுமண ஜோடிகள் ஹனிமூன் செல்ல உகந்த பேருந்தாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஜன்னல்கள் வாயிலாக உள்ளிருந்து மட்டுமே வெளியுலகைக் காண முடியும். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நடப்பவற்றைக் காண முடியாது.

பேருந்தில் இருப்பவர்களுக்கு முழுமையான தனிமை உணர்வை வழங்கும் பொருட்டு இத்தகைய ஜன்னல் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பேருந்தின்மீது சுலபமாக ஏறி-இறங்குவதற்கு ஏதுவாக ஒரு ஏணி வழங்கப்பட்டு இருக்கின்றசு. இதை தேவைப்பட்டால் மடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பேருந்தின் பின் பக்கத்திலேயே காரை நிறுத்திக் கொள்வதற்கான பார்க்கிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
சூப்பர் கார் வகை கார்களை மட்டுமே இங்கு பார்க் செய்து கொள்ள முடியும். அவை மட்டுமே மிகவும் குறைவான உயரம் கொண்டவையாக இருக்கும். உயரம் அதிகமான மற்றும் பெரிய எஸ்யூவி ரக கார்களை பேருந்தின் பின் பக்கத்தில் பார்க் செய்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
உதாரணமாக மெர்சிடிஸ் 280எஸ்எல் பகோடா வகையான கார்களை மட்டுமே நிறுத்திக் கொள்ள முடியும். இதேபோல், எலெக்ட்ரிக் கார்களையும் நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும். அவற்றை நிறுத்தி வைக்கும்போது அதனை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதற்காக பிரத்யேகமாக பேட்டரி பேக்குகள் பேரின் பின் பக்கத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
பேருந்தின் 39.4 அடி நீளம் இந்த அனைத்து வசதிகளையும் அதற்குள் தாங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கின்றது. பேருந்தில் 530 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரே இடம் பெற்றிருக்கின்றது. மேலும், இந்த பேருந்து ஒரு லிட்டருக்கு ஐந்து கிமீ மட்டுமே மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் தகவலாக அமைந்திருக்கின்றது. ஆனால், பேருந்தின் வசதிகளை பார்க்கையில் இது ஓர் பெரிய விஷயமாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படி ஒரு பேருந்து ராஜாக்கள் காலகட்டத்தில் வந்திருந்தால் ஆளுக்கு ஒன்னு கட்டாயம் வாங்கி அவங்க ராஜ்யத்தை வலம் வந்திருப்பாங்க. அந்த அளவிற்கு அரண்மனையையே தோற்கடிக்கும் வசதிகளுடன் இந்த பேருந்து தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய உங்களது கருத்துகளை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









