ஆர்டர் குவியுது! ஒரே நாள்ல இத்தன பேர் வாங்கீட்டாங்களா! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த டெலிவரி திருவிழா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று பிஒய்டி (BYD). ஆனால் இது இந்தியாவை சேர்ந்த நிறுவனம் கிடையாது. சீனாவை சேர்ந்தது. இந்திய சந்தையில் இதன் அட்டோ 3 (BYD Atto 3) கார் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த சூழலில் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் மெகா டெலிவரி நிகழ்ச்சியை (Mega Delivery Event) பிஒய்டி நிறுவனம் தற்போது நடத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில், 200 வாடிக்கையாளர்களுக்கு பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore), கொச்சி (Kochi), ஐதராபாத் (Hyderabad), மும்பை (Mumbai) மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (Delhi NCR) என இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இந்த மெகா டெலிவரி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
பிஒய்டி நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்திய சந்தையில் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவே, பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 காரின் மெகா டெலிவரி நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை தற்போது மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. அவை எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் (Extended Range) மற்றும் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) ஆகியவை ஆகும். இதில் எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் வேரியண்ட்டின் விலை 33.99 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டின் விலை 34.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில், 60.48 kWh பேட்டரி (Battery) வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 521 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். வழக்கமான ஏசி சார்ஜரை பயன்படுத்தினால் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 10 மணி நேரம் வரை ஆகும். ஆனால் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 50 நிமிடங்களில், பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாளில் 200 பேர் டெலிவரி எடுத்திருப்பதன் மூலம், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காருக்கு, வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம். விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில், அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








