BYD Seagull இ-கார் வெளியீடு! வெறும் 7.8லட்ச ரூபாக்கு விற்பனைக்கு வரபோகுதா? டாடாவ காலி பண்ணாம விடாது போலிருக்கே
இந்தியாவில் மட்டுமில்லைங்க சீனாவிலும் குட்டி கார்களுக்குதான் மவுசு மிக அதிகமாக காணப்படுகின்றது. இதனால்தான் சீனாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அந்த நாட்டில் சிறிய கார்களை அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சீன சந்தைக்காக பிஒய்டி (BYD) எனும் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் தயாரித்த ஓர் அழகான குட்டி எலெக்ட்ரிக் காரே சீகுல் (Seagull).
இது ஓர் ஐந்து கதவுகள் வசதிக் கொண்ட அளவில் சிறிய மின்சார காராகும். இந்த காரின் ஒட்டுமொத்த நீளமே 3,780 மிமீ மட்டுமே ஆகும். அகலம் 1,715 மி.மீட்டரையும்., உயரம் 1.540 மி.மீட்டரையும்., அந்த கார் கொண்டிருக்கின்றது. இதன் வீல் பேஸ்கூட 2,500 மிமீ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சிறிய அளவுக் கொண்ட காராகவே சீகுல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை பிஒய்டி நிறுவனம் சீனாவை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக சந்தையும் அதன் பட்டியலில் இருக்கின்றது. ஆமாங்க, பிஒய்டி நிறுவனம் தனது சீகுல் இ-காரை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், அந்நிறுவனம் கால் தடம் பதித்திருக்கும் நம் இந்திய நாட்டிலும் சீகுலை விற்பனைக்கு களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இ6 (எம்பிவி ரகம்) மற்றும் அட்டோ 3 (எஸ்யூவி ரகம்) ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், இவற்றின் வரிசையில் இன்னும் சில புதுமுக மின்சார கார் மாடல்களை அது இணைக்க இருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் அதன் சீ லயன் எஸ்யூவி, டால்பின் மற்றும் சீல் செடான் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே சீகுல்-ம் இணைக்கப்பட இருக்கின்றது.
இது டால்பினுக்கு கீழ் இடத்தில் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகின்றது. விலையிலும், அளவிலும் டால்பினைக் காட்டிலும் சீகுல் கார் மாடலே குறைவானதாக இருக்கும். இத்தகைய ஓர் குட்டி மின்சார கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் அது டாடாவின் டியாகோ இவி-க்கே போட்டியாக இருக்கும்.

இந்தியாவின் இப்போதைய மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இதுவே இருக்கின்றது. இதன் இடத்தை தட்டி பறிக்கும் விதமாக சீகுலின் இந்திய வருகை அமைய இருக்கின்றது. விலையிலும், அழகிலும், சிறப்பு வசதியிலும் பல மடங்கு போட்டியை இந்த கார் டாடா டியாகோ இவி-க்கு வழங்க இருக்கின்றது.
காரின் கவர்ச்சியான அழகிற்காக பல்வேறு அம்சங்களை பிஒய்டி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், விலங்குகளின் கண்களைப் போன்ற ஹெட்லைட், ஷார்ப்பான முகப்பு பகுதி, இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட், ஒற்றை விண்ட்ஷீல்டு வைப்பர், புல்-அப் ரக கதவு கை பிடிகள் மற்றும் அழகிய வீல்கள் என இந்த பட்ஜெட் விலை காரிலேயே எக்கசக்க அம்சங்களை பிஒய்டி சீகுல் காரில் வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க 5 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃப்ளாட் பாட்டம் ரக ஸ்டியரிங் வீல், அழகிய லேயர்டு டேஷ்போர்டு, பவர்டு டிரைவர் சீட், ஒயர்லெஸ் சார்ஜிங் பேட், இரு கோப்பை தாங்கிகள் என எக்கசக்க பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்தகைய அம்சங்களுடனையே உலகை ஆள விரைவில் சீகுல் புறப்பட இருக்கின்றது. இந்த காரை பிஒய்டி நிறுவனம் இப்போது வெளியீடு மட்டுமே செய்திருக்கின்றது. 2023 ஷாங்காய் ஆட்டோ ஷோ வாயிலாகவே அது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. வெளியீட்டைத் தொடர்ந்து அதற்கான புக்கிங்குகளையும் அது ஏற்க தொடங்கிவிட்டது.
இது தொடங்கப்பட்ட 24 மணி நேரங்களுக்கு உள்ளாகவே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை சீகுல் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. சீகுலை இரு விதமான பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்கு வழங்க பிஒய்டி திட்டமிட்டு இருக்கின்றது. முழு சார்ஜில் 305கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 30kWh பேட்டரி பேக் மற்றும் 405கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 38kWh பேட்டரி பேக் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கிறது.
பேட்டரி பேக்கை போலவே மின் மோட்டார் விஷயத்திலும் இரு விதமான தேர்வுகள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. 55 kW மற்றும் 70 kW திறன் கொண்ட மின் மோட்டார் தேர்வே வழங்கப்பட இருக்கின்றது. சீகுல் எலெக்ட்ரிக் காருக்கு அந்நாட்டு மதிப்பில் 78,800 - 95,800 யுவான்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 9.4 லட்சம் தொடங்கி ரூ. 11.43 லட்சம் ஆகும்.
இது இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் எனில் இதைவிட குறைவான விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. ரூ. 8 லட்சம் தொடங்கி ரூ. 10 வரையிலான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் மற்றும் விலை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை பிஒய்டி வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழல் நாட்டில் நிலவுகின்ற நிலையில் பிஒய்டியின் இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் எனில், இந்தியாவிலும் புக்கிங்கில் வெற்றி நடைபோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications









