மாருதி சுஸுகியை இந்த விஷயத்தில் எந்த கார் நிறுவனத்தாலும் நெருங்க கூட முடியல!! மக்கள் கூட்டம் குவியுது...
கொரோனா வைரஸ் பரவல், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை உள்ளிட்டவற்றிற்கு பிறகு கார்கள் விற்பனை ஓரளவிற்கு சீராகி வரும் சூழலில், கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த கார் பிராண்ட்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.
கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்தமாக 3,31,513 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 13% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2,93,438 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த மார்ச் மாதத்தை விட 1.3% குறைவாகும். ஏனென்றால் கடந்த மார்ச் மாதத்தில் சற்று அதிகமாக 3,36,046 கார்கள் சேல்ஸ் ஆகி இருந்தன.

வழக்கம்போல் கடந்த ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை மாருதி சுஸுகி பிடித்துள்ளது. கடந்த ஏப்ரலில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,37,320 ஆகும். அதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,21,995 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்த்தோமேயானால், உள்நாட்டு சந்தையில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை ஆனது 12.6% அதிகரித்துள்ளது. முதலிடத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் சவுகரியமாக அமர்ந்திருக்க, 2வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளது. கடந்த 1 வருடத்திற்கும் மேலமாக இந்த 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பலத்த போட்டி நிலவிவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக 2வது இடத்தை ஹூண்டாய் தனதாக்கி வருகிறது.

இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் 2வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் கடந்த ஏப்ரலில் மொத்தம் 49,701 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2022 ஏப்ரல் மாதத்தில் 44,001 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் இந்தியாவில் விற்க முடிந்தது. இதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை ஆனது 13% அதிகரித்துள்ளது.
3வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தை மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு டாடா மோட்டார்ஸ் உள்ளது. கடந்த மாதத்தில் டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 47,010 ஆகும். இதில் ஹைலைட் என்னவென்றால், கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் ஹூண்டாயை போல் டாடா கார்களின் விற்பனையும் 13% அதிகரித்துள்ளது. ஏனெனில் 2022 ஏப்ரலில் 41,590 கார்களை உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இவற்றிற்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் மஹிந்திரா மற்றும் கியா நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 34,698 மற்றும் 23,216 ஆகும். இதில் குறிப்பாக, மஹிந்திரா கார்களின் விற்பனை 2022 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் பாதியாக அதிகரித்துள்ளது. முதல் 5 இடங்களை இந்த 5 கார் நிறுவனங்கள் பிடித்திருக்க, கடைசி 5 இடங்களை டொயோட்டா, ஹோண்டா, எம்ஜி மோட்டார், ரெனால்ட், ஸ்கோடா நிறுவனங்கள் பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், 2022 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை இந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்ரோன் போன்ற சந்தைக்கு புதிய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளன. இருப்பினும், கடந்த மார்ச் உடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் சற்று கார்கள் விற்பனை குறைந்திருப்பதற்கு, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டத்தை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









